2018-01-18 15:34:00

மைய்ப்பூ கார்மேல் அன்னை திருத்தலத்தில் இளையோர் சந்திப்பு


சன.18,2018. Maquehue விமானத்தளத்தில், பூர்வீக இன மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறக்கப்பட்டு, உரிமையிழந்து வாழ்கின்ற இம்மக்களுக்காகக் குரல் கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை அழிப்பதன் வழியாக எவரும் தங்களின் கோரிக்கைகளை நிலைநிறுத்த முடியாது என்றும், வன்முறையைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். Maquehue விமானத்தளத்திலிருந்து, திருச்சிலுவை அருள்சகோதரிகளின் இல்லத்திற்குச் சென்றார் திருத்தந்தை. 1844ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் தொடங்கப்பட்ட இச்சகோதரிகள் சபை, ஐரோப்பா, ஆசியா, தென்னாப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் மறைப்பணியாற்றி வருகின்றது. தெமுகோவில் 1963ம் ஆண்டு முதல், இச்சபையினர் மறைப்பணியாற்றி வருகின்றனர். திருச்சிலுவை இல்லத்தில், எட்டு மப்புக்கே இனப் பிரதிநிதிகள், புலம்பெயர்ந்தவர்கள் உட்பட, 11 பேருடன் மதிய உணவருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், அங்கிருந்து 31 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தெமுகோ, “La Araucania” விமான நிலையம் சென்று சந்தியாகோ நகருக்குப் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்புதன் உள்ளூர் நேரம் மாலை ஐந்து மணிக்கு சந்தியாகோ விமானப்படை விமானத்தளம் சென்றிறங்கிய திருத்தந்தை, மாலை 5.20 மணிக்கு மைப்பூ கார்மேல் அன்னை மரியா திருத்தலம் சென்றார். 1818ம் ஆண்டில், மைப்பூ திருத்தலப் பகுதியில், சிலே இராணுவமும், ஆன்டஸ் இராணுவமும் சேர்ந்து, இஸ்பானியர்களுக்கு எதிராக நடத்திய போரில் வெற்றி பெற்றதே, சிலே நாடு சுதந்திரம் அடையக் காரணமானது. இதற்கு நன்றியாக, இராணுவ அதிபர் Bernardo O'Higgins என்பவர், இவ்விடத்தில் கார்மேல் அன்னைக்கு ஆலயம் கட்டப் பணித்தார். 1906 மற்றும் 1927ம் ஆண்டுகளில் நிலநடுக்கங்களால் மிகவும் சேதமடைந்த இத்திருத்தலத்தின் சீரமைப்புப் பணிகள், 1944ம் ஆண்டில் தொடங்கின. முப்பது ஆண்டுகள் சென்று, 1973ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இந்த திருத்தலம் அர்ச்சிக்கப்பட்டது. இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இந்த திருத்தலத்தில் இளையோரைச் சந்தித்தார். சாலையோரத்தில் யாராவது படுத்துக்கிடந்தால் அவர்களுக்கு உதவாமல், ஒருபோதும் அவர்களை கடந்து செல்லாதவராகிய இளம் சமாரியர் போன்று இருங்கள். நீங்கள் என்ன செய்தாலும், ‘கிறிஸ்து இவ்விடத்தில் என்ன செய்வார்?’ என்ற passwordஐ அதாவது கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள் என்பதை இஸ்பானியத்தில் சொல்லி இளையோருக்கு தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. மைப்பூ கார்மேல் அன்னை திருவுருவத்திற்கு செபமாலை ஒன்றையும் அணிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.