2018-01-19 14:58:00

இக்கிக்கெ நகரின் Lobito வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி


சன.19,2018. சிலே நாட்டின் தலைநகரான, சந்தியாகோ நகருக்கு 1,840 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, இக்கிக்கெ நகரம், அந்நாட்டின் வடக்கே, ஆன்டெஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. Tarapacá மாநிலத்தின் தலைநகரமாகிய இக்கிக்கெ நகரம், பசிபிக் பெருங்கடல் கடற்கரையைக் கொண்டு, பெருங்கடலும், அட்டகாமா பாலைநிலமும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. பெருமளவான சிலே நாட்டு மக்கள் வாழும் இக்கிக்கெ நகரம், ஒரு காலத்தில் பெரு நாட்டைச் சேர்ந்ததாய் இருந்தது. ஆயினும், 1879ம் ஆண்டுக்கும், 1883ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த பசிபிக் போருக்குப் பின், இந்நகரம் சிலே நாட்டுக்கு உரியதாய் மாறியது. இக்காலத்தில், இந்நகரம், சிலே நாட்டின் இரு துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 16ம் நூற்றாண்டில் இஸ்பானிய காலனி ஆதிக்கத்தின்போது உருவாக்கப்பட்ட இக்கிக்கெ நகரம், பலமுறை நிலநடுக்கங்களால் சேதமடைந்தது. பின்னர், 19ம் நூற்றாண்டில் அட்டகாமா பாலைநிலத்தில், வெடிமருந்துகள் தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்க வேலை தொடங்கப்பட்டதிலிருந்து இக்கிக்கெ நகரம் வளர்ச்சியடையத் தொடங்கியது. கனவுகளின் பூமி எனப்படும் இக்கிக்கெ நகரம், தென் அமெரிக்காவில் மிகப்பெரிய வர்த்தக நகரமாகவும் நோக்கப்படுகின்றது. 1929ம் ஆண்டில் இக்கிக்கெ மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்நகரின் “Diego Aracena” விமான நிலையத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Lobito வளாகத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கடலுக்கு இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இவ்வளாகம், இருபது ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலிக்கென, இவ்வளாகத்தின் ஏறக்குறைய ஐந்து ஏக்கர் பகுதி பயன்படுத்தப்பட்டது. அந்த வளாகத்தில் கூடியிருந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து, உள்ளூர் நேரம் பகல் 11.30 மணிக்கு திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. சிலே நாட்டு பாதுகாவலராகிய, கார்மேல் அன்னைக்கு அர்ப்பணித்து நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலி மேடையில் அந்த அன்னையின் திருவுருவமும் வைக்கப்பட்டிருந்தது.

கானாவூர் திருமண நிகழ்வை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, எந்த ஒரு நல்ல தாயையும் போலவே, அன்னை மரியாவும், தம்மைச் சுற்றி நடப்பவை அனைத்தையும் அறிந்திருக்கிறார், நம் இதயங்களை அழுத்தும் சுமைகளை இறையன்னை அறிவார், இந்தப் பூமி, கனவுகளின் பூமி எனப்படுகின்றது, இம்மண்ணில் விரும்தோம்பலையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம் என்று இக்கிக்கெ பகுதி விசுவாசிகளிடம் கூறினார். 2010க்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இலத்தீன் அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை அதிகமாக ஏற்ற நாடு சிலே என்று, ஐ.நா. மற்றும் திருஅவை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இத்திருப்பலியின் இறுதியில் சிலே நாட்டினருக்கு நன்றியும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலிக்குப் பின்னர், ஆயர்கள், அருள்பணியாளர்களுடன் பவனியாக வந்தபோது, அத்திருப்பலியில் கலந்துகொண்ட சிலே அரசுத்தலைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.