2018-01-19 12:52:00

திருத்தந்தை - மகிழ்வைக் கொண்டாடத் தெரிந்த சிலே நாட்டவர்


சன.19,2018. “இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது.” (யோவான் 2:11)

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதி சொற்கள் இவை. இயேசு ஒரு விருந்தில் கலந்துகொண்டதை, இச்சொற்கள் கூறுகின்றன. நற்செய்தி முழுவதுமே, ஒரு விருந்தில், மகிழ்வில் கலந்துகொள்ள விடுக்கப்படும் அழைப்பு. நற்செய்தியில் கூறப்பட்டுள்ளவை மகிழ்வின் ஊற்றாக விளங்குகின்றன. "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்." (யோவான் 15:11) இந்த மகிழ்வு தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்டு வருகிறது. நாம் கிறிஸ்தவர்கள் என்பதால் உருவாகும் மகிழ்வு இது.

சிலே நாட்டில் வாழும் நீங்கள் அனைவரும், இந்த மகிழ்வைக் கொண்டாடத் தெரிந்தவர்கள். உங்களுடைய கிறிஸ்தவ மகிழ்வு, கோவில்களுக்குள் மட்டும் கொண்டாடப்படுவது கிடையாது; மாறாக, உங்கள் ஊர் வீதிகளிலும் உங்கள் மத நம்பிக்கையை, ஆடல், பாடலுடன் கொண்டாடுகிறீர்கள். மிகவும் வறண்ட பாலை நிலத்தால் உங்கள் நாடு சூழப்பட்டிருந்தாலும், உங்கள் மகிழ்வால் அது வண்ணமயமாகிறது. "பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்; செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும்." (எசாயா 32:15)

கொண்டாட்டங்களில் மகிழ்வு குறையின்றி தொடர்வதற்காக அன்னை மரியா என்ன செய்தார் என்பதை இன்றைய நற்செய்தி சொல்கிறது. கொண்டாட்டங்களில் ஏற்படும் குறைகளை, ஓர் அன்னைக்குரிய அக்கறையோடு மரியா கவனித்து வந்தார். எனவே, அவர் இயேசுவிடம் சென்று, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) என்று கூறினார்.

அதேவண்ணம் அன்னை மரியா நமது ஊர்கள், வீதிகள், இல்லங்கள், மருத்துவமனைகள் அனைத்திலும் தங்கியுள்ளார். லா திரானா கன்னி, அய்கீனா கன்னி, அரிக்காவின் கன்னி என்று பல வடிவங்களில் மரியா நம்முடன் இருக்கிறார். நம்மிடம் உள்ள குறைகளைத் தீர்க்க, இயேசுவிடம், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று தணிந்த குரலில் சொல்கிறார்.

அத்துடன், அன்னை மரியா அமைதியடையவில்லை. பணியாளர்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று கூறுகிறார். நற்செய்தியில் மரியா கூறும் வார்த்தைகள் மிகச் சிலவே என்றாலும், அவை மிக பொருள் நிறைந்தவை. மரியா நம்மிடமும் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று கூறுகிறார். இச்சொற்கள், இயேசு, தன் முதல் புதுமையைச் செய்வதற்குத் தூண்டுதலாக அமைந்தன.

இயேசு இந்தப் புதுமையை பணியாளர்களுடன் இணைந்து செய்தார். அந்தப் பணியாளர்கள், தூய்மைச் சடங்கிற்கென வைக்கப்பட்டிருந்த கல் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வந்தபோது, புதுமை ஆரம்பமானது. அதேபோல், நாமும் புதுமைகளைத் துவக்க அழைக்கப்பட்டுள்ளோம். பிறரது புதுமைகளில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளோம்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, அய்மாரா மொழியில் சொல்லப்படுவதுபோல், இக்கிக்கெ கனவுகளின் பூமி. பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்களுக்கு புகலிடம் தந்த பூமி இது. கனவுகளின் பூமி, விருந்தோம்பலின் பூமியாகவும் விளங்க உழைப்போம். விருந்தோம்பல் இன்றி, மூடிய கதவுகளுக்குப் பின் நடைபெறும் கொண்டாட்டங்களில் கிறிஸ்தவ மகிழ்வு இருக்காது. மற்றவர்களை ஒதுக்கிவிட்டு, நடைபெறும் விருந்துகளில் கிறிஸ்தவ மகிழ்வு இருக்காது. (காண். லூக்கா 16:19-31)

நமது ஊர்களில், வீதிகளில், கொண்டாடும் காரணங்கள் ஏதுமின்றி தவிப்போரை அடையாளம் காண முயற்சி எடுப்போம். அவர்களிடம் 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்பதை உரத்தக் குரலில் சொல்ல நாம் அஞ்சத் தேவையில்லை. அநீதி, வேலையின்மை, வீடற்ற நிலை, என்று பல வழிகளில் துன்புறுவோரைக் காண கவனமுடன் முயற்சி எடுப்போம்.

கானா திருமணத்தில் நடந்த புதுமையில், தங்கள் எளிய பங்கை ஆற்றிய பணியாளர்களைப்போல், நாமும் நம் பங்களிக்க அஞ்சவேண்டாம். நமது சமுதாயங்களை இறைவனின் பிரசன்னத்தால் நிறைவு செய்யும் புதுமையை இயேசு ஆற்றுவதற்கு நாம் வழி வகுப்போம். அனைவரையும் வரவேற்று, நற்செய்தியைப் பகிர்ந்து, நம் பாரம்பரியக் கலாச்சாரத்தின் ஞானத்தைப் போற்றிக் காத்து, நாம் கொண்டாட்டங்களை மேற்கொள்வோம். இதுவே உண்மையான கொண்டாட்டம். இதுவே தண்ணீரை இராசமாக்குகிறது. இதுவே இயேசு ஆற்றும் புதுமை.

சிலே நாட்டில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மரியா, இயேசுவிடம், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கூறுவாராக! "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று அன்னை மரியா கூறும் சொற்கள், நமக்குள் என்றும் ஒலிப்பதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.