2018-01-19 13:06:00

திருப்பலி முடிவில் திருத்தந்தை: அமைதி, ஒற்றுமை நிலவட்டும்


இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின் இறுதியில், முதலில் இக்கிக்கெ மறைமாவட்ட ஆயர் Guillermo Vera Soto அவர்களுக்கும், அனைத்து இறைமக்களுக்கும்  நன்றியை எடுத்துரைக்கிறேன். இது வழியனுப்புதல் விழாபோல் உள்ளது.

இந்நாட்டை சந்திக்க எனக்கு அழைப்பு விடுத்த அரசுத்தலைவர் Michelle Bachelet அவர்களுக்கும், குறிப்பாக, இந்த திருத்தூதுப்பயணம் சிறந்த முறையில் நிறைவேற ஏற்பாடுச் செய்த அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். 20,000 மேலான சுயவிருப்பப்பணியாளர்கள், இத்திருப்பயண ஏற்பாடுகளில் பணியாற்றியுள்ளனர். இவர்களின் அர்ப்பணமும் கடின உழைப்பும் இதன் வெற்றிக்கு உதவியுள்ளன. என்னுடைய திருத்தூதுப்பயணத்தில் உடன் வந்த, குறிப்பாக, தங்கள் செபத்துடன் என்னுடன் பயணம் செய்த, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது, சிலே நாட்டின் சகோதர மற்றும் நட்பு நாடான பெரு நாட்டில் என் திருத்தூதுப் பயணத்தை தொடரச் செல்கிறேன்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, ஒவ்வொரு திருப்பலியிலும், 'உமது திருஅவையின் விசுவாசத்தை கண்ணோக்கி எங்களுக்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக' என செபிக்கிறோம். என் திருத்தூதுப்பயணம் நிறைவுறும் இவ்வேளையில், இதைவிட வேறு என்ன நான் உங்களுக்காக இறைவனிடம் கேட்கமுடியும். 'இறைவா, இவர்களின் விசுவாசத்தை கண்ணோக்கி இவர்களுக்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளும்'.

மீண்டும் நன்றி கூறும் வேளையில், எனக்காக செபிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். பொலிவியா, பெரு ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கும் திருப்பயணிகளுக்கு, குறிப்பாக, அர்ஜென்டினா நாட்டின் திருப்பயணிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜென்டினாவை குறிப்பிட்டுச் சொல்வது குறித்து பொறாமைப்படாதீர்கள், அது என் தாய் நாடு. சந்தியாகோ, தெமுகோ, இக்கிக்கெ ஆகிய இடங்களில் நான் மேற்கொண்ட பயணங்களில் என்னோடு உடன்வந்த அர்ஜென்டீனா சகோதர சகோதரிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.