2018-01-19 14:47:00

விமானப் பயணத்தில் திருமணத்தை ஆசீர்வதித்தார் திருத்தந்தை


சன.19,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15, இத்திங்கள் இரவில் சிலே நாட்டில் காலடி பதித்தது முதல், கடந்த மூன்று நாள்களும் மிகுந்த வியப்பூட்டும் நிகழ்வுகளை ஆற்றியுள்ளார். விமானப்பயணத்தில் திருமணத்தை ஆசீர்வதித்தது, தான் சென்ற சாலையில் தடுமாறி கீழே விழுந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஆறுதல் கூறியது, சில அருள்பணியாளர்களால் பாலியல் முறையில் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகளைக் கேட்டு அவர்களுடன் கண்ணீர் சிந்தியது போன்ற திருத்தந்தையின் நிகழ்வுகள் சிலே மக்களுக்கு வியப்புகலந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. சிலே நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது மற்றும் நிறைவு நாளாகிய சனவரி 18, இவ்வியாழன் காலை ஏழு மணிக்கு, சந்தியாகோ நகர், திருப்பீட தூதரகத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை, சந்தியாகோ விமானப்படை விமானத்தளம் சென்று, LATAM விமானத்தில் சிலே நாட்டின் இக்கிக்கெ (Iquique) நகருக்குச் சென்றார். 2 மணி 20 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில், 41 வயது நிரம்பிய Carlos Cuffando Elorriaga, 39 வயது நிரம்பிய Paula Podestà Ruiz ஆகிய இரு விமானப் பணியாளர்கள், தங்களின் திருமண வாக்குறுதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் அறிவிக்க, திருத்தந்தையும், அவர்களின்  திருமணத்தை ஆசீர்வதித்தார். திருத்தந்தை ஒருவர், விமானப்பயணத்தில் திருமணத்தை ஆசீர்வதித்தது இதுவே முதன்முறையாகும். திருத்தந்தை ஆசீர்வதித்த இந்தத் திருமணம், திருஅவை கோட்பாடுகளின்படி சரியானதே என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள் சொல்லியுள்ளார். விமானப் பணியாளர்களாகிய இத்தம்பதியர், விமானப் பணிகளின்போது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தனர். பின்னர் 2010ம் ஆண்டில் சிலே அரசு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். திருஅவை முறைப்படி திருமணம் செய்யவிருந்த ஆலயம், அச்சமயத்தில் சிலே நாட்டில் நடந்த நிலநடுக்கத்தால் அழிந்ததால், இதுவரை இத்தம்பதியர், திருஅவை முறைப்படி திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர். தற்போது இவர்கள், திருத்தந்தையின் ஆசீரோடு தங்கள் வாழ்வைத் தொடர்வதில் கிடைத்த வாய்ப்பை எண்ணி மிகவும் மகிழ்ந்துள்ளதுடன், இந்நிகழ்வு, திருத்தந்தையின் விருப்பம் அல்ல, மாறாக, தங்களின் விருப்பம் என்றும், செய்தியாளர்களிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.