2018-01-20 16:03:00

அரசு, தூதரக, கலாச்சார, பொதுமக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு


சன.20,2018. பெரு நாட்டின் தலைநகர் லீமா, அந்நாட்டின் மத்திய பகுதியில், பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திற்கு 154 மீட்டர் உயரமுடைய இந்நகரம், 1535ம் ஆண்டு சனவரி 18ம் தேதி, இஸ்பானிய நாடுகாண் பயணி Francisco Pizarro என்பவரால், அரசர்களின் நகரம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்நகரத்தை உருவாக்குவதற்கு, சனவரி 6, திருக்காட்சி திருவிழாவன்று தீர்மானிக்கப்பட்டதால் இப்பெயர் சூட்டப்பட்டது. விரைவில் இப்பெயர் மறைந்து லீமா என்ற பெயரில் இந்நகரம் அழைக்கப்படலானது. இந்நகரம், தென் அமெரிக்காவில் முக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரிலுள்ள அரசு மாளிகையில், அரசு, தூதரக, கலாச்சார மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. முதலில், பெரு நாட்டு அரசுத்தலைவர் Pedro Pablo Kuczynski வரவேற்றுப் பேசினார். பின் திருத்தந்தையும் உரையாற்றினார். அதன்பின்னர் லீமா நகரின், புனித பேதுரு ஆலயம் சென்று, செபித்து, ஏறத்தாழ நூறு இயேசு சபை அருள்பணியாளர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித பேதுரு ஆலயம், லீமாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆலயத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு லீமா நகரின் திருப்பீட தூதரகம் சென்று, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் பெரு நாட்டில் இவ்வெள்ளி தின பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன. மேலும், இவ்வியாழன் மாலை, லீமா நகர் விமான நிலையத்திலிருந்து, லீமா நகருக்கு, திருத்தந்தை சென்ற ஃபியட் காரின் ஒரு சக்கரத்தில் காற்று குறைந்ததால், கார் இடையில் நிறுத்தப்பட்டு, பின் திருத்தந்தை வேறு ஒரு காரில் ஏறி லீமா சென்றார்.

சனவரி 20, இச்சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம்,  நேரம், இச்சனி மாலை 5. 40 மணிக்கு பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். Trujillo நகரில் பயண நிகழ்வுகள் நடைபெறுவதாய் குறிக்கப்பட்டுள்ளது. உரிமையிழந்து, குரலிழந்து வாழ்கின்ற மக்கள், உரிமைகளுடன் வாழ்வார்களாக.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.