2018-01-21 13:26:00

Armas வளாகத்தில் “வாயிலின் அன்னை மரியா” பக்திமுயற்சி


சன.21,2018. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.45 மணியளவில், Armas வளாகத்தில் “வாயிலின் அன்னை மரியா” பக்திமுயற்சியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அழகிய சிவப்புநிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில், வெண்ணிற மேலாடையால் அலங்கரிக்கப்பட்ட வாயிலின் அன்னை மரியா திருவுருவம் வைக்கப்பட்டிருந்தது. அன்னை மரியின் கழுத்தில், இப்பக்திமுயற்சியின் இறுதியில், தங்க செபமாலை ஒன்றை அணிவித்தார் திருத்தந்தை. இப்பக்திமுயற்சியில் திருத்தந்தை மறையுரையும் வழங்கினார். பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்செயல்களைக் கண்டித்துப் பேசிய திருத்தந்தை, பெண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றுமாறும், எல்லாவிதமான வன்முறைகளை ஒழிக்கும் புதிய கலாச்சாரத்தைக் கொணருமாறும் பெரு நாட்டு அரசை கேட்டுக்கொண்டார். விசுவாசிகளிடம், அன்னை மரியா நம்மைக் கைவிட மாட்டார் என்றும் கூறியத் திருத்தந்தை, பெரு நாட்டில் “Otuzco அமல அன்னை” என்று மிகவும் போற்றப்படும், அன்னை மரியை, “வாயிலின் அன்னை மரியா”, ‘இரக்கம் மற்றும் நம்பிக்கையின் அன்னை மரியா’ என்று தான் அழைக்க விரும்புவதாகத் தெரிவித்தார். பெண்கள் கொலை செய்யப்படுவதும், பாலியல் முறையில் பாகுபடுத்தப்படுவதும், உலகில் அதிகமாக இடம்பெறும் பூமி இலத்தீன் அமெரிக்கா என்று சொல்லப்படுகிறது. துருஹில்யோவில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, லீமா திரும்பிய திருத்தந்தை, குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி முப்பது நிமிடத்திற்கு முன்னரே லீமா சென்றார். அந்நகரின் திருப்பீட தூதரகத்தின் முன்னர், ஏறத்தாழ முப்பது நோயுற்றோர் உட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்தனர். அவர்களோடு சேர்ந்து செபித்து ஆசீர்வதித்து, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் பெரு நாட்டில் இச்சனிக்கிழமை பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.

அடைபட்ட துறவு சபையினருடன் செப வழிபாட்டில் பங்கேற்பது, லீமா பேராலயத்தில் பெரு நாட்டுப் புனிதர்களின் திருப்பொருள்கள் சிற்றாலயத்தில் செபிப்பது, பெரு நாட்டு ஆயர்களைச் சந்திப்பது, மாலை 4.15 மணிக்கு "Las Palmas" விமானப்படைத்தளத்தில் திருப்பலி நிறைவேற்றுவது ஆகியவை திருத்தந்தையின் இஞ்ஞாயிறு மற்றும் இறுதிநாள் பயணத் திட்டத்தில் உள்ளன. இத்திருப்பலியில் ஏறத்தாழ எட்டு இலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திருப்பலியை நிறைவேற்றி, பெரு நாட்டு மக்களிடமிருந்து விடைபெற்று, உள்ளூர் நேரம் மாலை 6.45 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் காலை 5.15 மணிக்கு, பெரு நாட்டின் லீமா நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன், சிலே மற்றும் பெரு நாடுகளுக்கான திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமும் நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.