சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

Huanchaco திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

Huanchaco கடற்கரை வளாகத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், திருத்தந்தை மறையுரை வழங்குதல் - AFP

21/01/2018 12:49

சன.21,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கடல் சூழ்ந்த இவ்விடத்தில் கூடியுள்ள நாம், திருத்தூதர்கள் அன்று இயேசுவுடன் பெற்ற அனுபவத்தை மீண்டும் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். இங்குள்ள நம்மில் பலர் வாழ்வதுபோல், சீடர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

இயற்கையின் சீற்றங்களை சீடர்கள் உணர்ந்ததுபோல், நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். “Niño costero” என்ற இயற்கை பேரிடரின் விளைவுகளை இன்னும் நீங்கள் உணர்ந்து வருகிறீர்கள். இன்று நான் இங்கு உங்களுடன் செபிக்க வந்திருப்பதற்கு, அது ஒரு முக்கிய காரணம்.

கடினமானச் சூழல்களில் நமது நம்பிக்கை தடுமாறுவதை நாம் இன்றைய திருப்பலியில் எடுத்துரைக்கிறோம். தன்னையே பலியாகத் தந்த இயேசு, நம் துன்பங்களை உணர்ந்தவர். துன்பங்களிலிருந்து நம்மை மீட்க கரம் நீட்டுபவரே, நம் கடவுள். துயரமான நேரங்களில் நாம் தனித்து நிற்காமல், அனைவரோடும் இணைத்து நிற்பதே, தூய ஆவியார் நமக்கு வழங்கும் கொடை.

இன்றைய நற்செய்தியில் நாம் வாசித்த பத்து தோழியர் உவமையில், அப்பெண்களுக்கு நிகழ்ந்ததென்ன? நள்ளிரவில் குரல் கேட்டதும், அவர்களில் ஒரு சிலர், தங்களிடம் தேவையான அளவு எண்ணெய் இல்லை என்பதை உணர்ந்தனர். மற்றவர்களோ, தங்கள் விளக்குகளை எண்ணெயால் நிரப்பி, மணமகனைக் காணச் சென்றனர்.

இதேபோல் நம் வாழ்விலும் நிகழ்கிறது. முக்கியமான தருணங்களில் நம் வாழ்வை எது நிறைந்துள்ளது; இருளில் நம்மை எந்த விளக்கு வழிநடத்தியுள்ளது என்பதை உணர்கிறோம். “Niño” புயல் வீசிய இருளான வேளையில், நீங்கள், ஒன்றிப்பு, தாராள மனம் ஆகிய எண்ணெயை நிரப்பி, அடுத்தவருக்கு உதவிகள் செய்யச் சென்றபோது, அங்கு ஆண்டவரைச் சந்தித்தீர்கள்.

எண்ணெய் இல்லை என்பதை உணர்ந்த சில தோழியர், முக்கியமானத் தருணத்தைத் தவறவிட்டு, எண்ணெய் வாங்கச் சென்றனர். வாழ்வின் அடிப்படையான தேவைகளை, விலைகொடுத்து வாங்கிவிட முடியாது. முக்கியமானத் தருணங்களில், ஒரு சமுதாயம் எவ்விதம் நடந்துகொள்கிறது என்பதே, அச்சமுதாயத்தின் இலக்கணமாக அமையும். கடினமானச் சூழல்களில் அடுத்தவருக்கு உதவுவதே, கிறிஸ்தவ சமுதாயத்தின் இலக்கணம். "நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவான் 13:35)

வேறு 'புயல்களும்' உங்கள் குழந்தைகளின் வாழ்வில் பெரும் அழிவுகளைக் கொணரலாம். இந்தப் புயல்களில், பணம் கொடுத்து கொலை செய்வதற்கு ஏவிவிடும் 'கூலிப்படை' போன்ற வன்முறைகள் உள்ளன. சரியான கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய வாய்ப்புக்கள் இல்லாததால், இளையோர் மதிப்புமிக்க எதிர்காலத்தை உருவாக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இந்தப் புயல்களை எவ்விதம் எதிர்கொள்வது, நம் குழந்தைகள் இவற்றை எதிர்கொள்வதற்கு எவ்விதம் உதவுவது என்று புரியாமல் தடுமாறுகிறோம். இயேசு கிறிஸ்து என்ற நற்செய்தியைத் தவிர, வேறு சிறந்த வழி எதுவும் இல்லை என்பதை உங்களுக்குக் கூறவிழைகிறேன்.

நம் குடும்பங்களில் நிலவும் தலை சிறந்த பண்புகளை அகற்ற முயலும் அத்தனை சக்திகளுக்கும் எதிராக நாம் ஒருங்கிணைந்து செயல்படமுடியும் என்ற உணர்வைத் தருவது, இயேசு கிறிஸ்துவே! எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், கிறிஸ்தவ சமுதாயம் இணைந்து செயலாற்றமுடியும் என்ற நம்பிக்கையைத் தருவது, இயேசு கிறிஸ்துவே!

இந்தப் பகுதியில் வாழ்வோர், கன்னி மரியாவின் மீது கொண்டுள்ள அன்பை நான் அறிவேன். மரியா தன் மேலாடை கொண்டு, உங்களைப் பாதுகாப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

21/01/2018 12:49