2018-01-21 12:58:00

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை


சன.21,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நாம் கூடியிருக்கும் இந்த குருத்துவ மடம், எண்ணற்ற மறைப்பணியாளர்களை உருவாக்கிய ஒரு தொட்டில். இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் பாதுகாவலரான, மோக்ரோவெஹோவின் புனித துரிபியுஸ் அவர்களை (Saint Turibius of Mogrovejo) என்னால் மறக்க இயலாது. இவர்கள் அனைவரும் நமது வரலாற்று வேர்களைப் பார்ப்பதற்கு நம்மை அழைக்கின்றனர்.

நமது நம்பிக்கை, இறையழைத்தல் ஆகியவற்றின் ஒரு முக்கிய அம்சம், நினைவுக்கூர்வது. நினைகூர்வதன் ஒரு சில புண்ணியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1.மகிழ்வு நிறைந்த தன்னிலை உணர்வு.

சீடர்கள் இயேசுவைச் சந்தித்த நிகழ்வை, இப்போது நற்செய்தியாக வாசித்தோம். இப்பகுதியில், சிறிது பின்னோக்கிச் சென்றால், அங்கு திருமுழுக்கு யோவானைக் காண்கிறோம். "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:35) என்று இயேசுவைச் சுட்டிக்காட்டினார், யோவான். "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" (மத்தேயு 11:11) என்று இயேசுவால் விவரிக்கப்பட்ட யோவான், தான் 'மேசியா' அல்ல என்ற தெளிவான தன்னிலை உணர்வு கொண்டிருந்தார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்துள்ள நாம், நமது கணக்கற்ற வேலைகளால் ஆண்டவரின் இடத்தை நிரப்புவதற்காக அழைக்கப்படவில்லை. நாம் 'மெசியாக்கள்' அல்ல என்பதை உணர்வது நல்லது. நாம் யார் என்பதை தெளிவாக உணர்ந்தால், நாம் முக்கியமானவர்கள் என்று நினைக்கத் தூண்டும் சோதனைகளிலிருந்து விடுதலை பெறமுடியும்.

நமது குறைபாடுகளை உணர்ந்து சிரித்துக்கொள்வதன் வழியாகவும், இந்தச் சோதனையை நம்மால் வெல்லமுடியும். நமது குழுமங்களில் ஒருவர் மற்றவரைக் குறித்தோ, நம் குழுமத்தைக் குறித்தோ சிரிப்பதற்குப் பதில், நம்மைக் குறித்து சிரித்துக்கொள்வோம். குழுமங்களில் மற்றவரோடு இணைந்து சிரிக்கப் பழகிக்கொள்வோம்.

2.அழைக்கப்பட்ட நேரம்

"அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி" (யோவான் 1:39) என்று நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவைச் சந்திக்கும் நேரம், நம் வாழ்வை மாற்றுகிறது. அந்த நாளை, நேரத்தை நினைவில் கொள்வது மிகவும் நல்லது. இந்த நினைவை இழப்பது, நம் வேர்களை இழப்பதற்குச் சமம்.

நாம் இயேசுவைச் சந்தித்த நேரம், மிக உயர்வான, உன்னதமான நேரமாக இல்லாமல் போகலாம். நாம் தலை சிறந்தவர்கள் என்பதால், இயேசு நம்மை அழைக்கவில்லை; அவரது அன்பு மிகுதியால் நம்மை அழைத்தார். (காண்க. இணைச்சட்டம் 7:7-8)

இங்கு, மற்றுமோர் அம்சத்தை வலியுறுத்திக் கூற விழைகிறேன். நாம் குருத்துவ பயிற்சியில், துறவு இல்லங்களில் இணைந்தபோது, நமது குடும்பம், நாம் வளர்ந்த பகுதி இவற்றில் நிலவிய பக்தி, நம்மை உருவாக்கியிருந்தது. நீங்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த திருத்தலத்தின் சுவர்களும் மக்களின் பத்தியை பறைசாற்றும். இந்த எளிமையான பக்தி உணர்வு கொண்ட மக்களை மறந்துவிட்டு, "தூய்மையின் அறிஞர்களாக" மாறிவிடாதீர்கள். செபிக்கக் கற்றுத்தந்தவர்களை, மறப்பதோ, மதிக்கத் தவறுவதோ வேண்டாம்.

இத்தகைய நினைவுகூர்தல், நம்மை மகிழ்விலும், நண்றியிலும் நிறைக்கும். நன்றியுணர்வு அற்ற இறைப்பணியாளர்களை மக்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளமுடியும். நன்றியும், மகிழ்வும் நிறைந்த இறைப்பணியாளரே, தங்கள் காயங்களைக் குணமாக்கமுடியும் என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர்.

3.தொற்றிப்படரும் மகிழ்வு

இயேசுவை அன்று சந்தித்தவர்களில் ஒருவரான அந்திரேயா, பேதுருவிடம் சென்று, "மெசியாவைக் கண்டோம்" (யோவான் 1:41) என்று கூறினார். இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கை, தொற்றிப்படரும் தன்மை கொண்டது. அந்திரேயா, தான் பெற்ற மகிழ்வை, பகிர்ந்துகொள்ளும் மறைப்பணியை, தனக்கு மிக நெருக்கமானவர்களுடன் துவங்கினார். திருத்தூதர்களிடம் உறுதியாக விளங்கிய ஒரு பண்பு, மகிழ்வு.

துண்டுப்பட்டிருக்கும் இன்றைய உலகம், மற்றவர்களிடமிருந்து விலகி, நமக்குள் நாமே மகிழ்வைக் கண்டுகொள்ளும்படி நம்மைத் தூண்டுகிறது. துண்டுப்பட்டிருப்பதும், மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பதும் வெளி உலகில் மட்டும் காணப்படும் குறைகள் அல்ல. அவை, துறவு இல்லங்களிலும் தீமைகளை விளைவிக்கின்றன.

ஒன்றிப்பை உருவாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஒன்றிப்பு என்றால், அனைவரும் ஒரே சீரான, ஒரே மாதிரியான சிந்தனை கொண்டிருப்பது அல்ல. இறைவன் வழங்கும் அருங்கொடைகள் பலவகை. ஒவ்வொருவரின் தனித்துவத்தை, அவர்களது கொடைகளை உணர்ந்து ஏற்றுக்கொள்வதே, ஒன்றித்த குழுமத்தை உருவாக்க சிறந்த வழி.

நமது நினைவுகூர்தல், நம்மை, மகிழ்வாலும் நன்றியாலும் நிறைக்கட்டும்! ஒன்றிப்பின் ஊழியர்களாக நம்மை உருவாக்கட்டும்! ஆண்டவரும், அன்னை மரியாவும் உங்களைப் பாதுகாப்பார்களாக! எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.