2018-01-21 13:18:00

துருஹில்யோவில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு


சன.21,2018. சனவரி 20, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு அதிகாலை 1.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருஹில்யோ அன்னை மரியா பேராயலம் சென்று செபித்தார். பின்னர் அப்பேராயலத்திற்கு அருகிலுள்ள குருத்துவ கல்லூரியில், பெரு நாட்டின் வட பகுதியில் பணியாற்றும், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களில் ஏறத்தாழ ஆயிரம் பேரைச் சந்தித்தார் திருத்தந்தை. முதலில் Piura- Tumbes பேராயர் Jose Antonio Eguren Anselmi அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். Sodalitium Christianae Vitae என்ற அமைப்பின் உறுப்பினராகிய பேராயர் Anselmi அவர்களை, அதற்குத் தலைவராக அண்மையில் திருத்தந்தை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவழிபாடு போன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மறையுரையாற்றிய திருத்தந்தை, எண்ணிக்கையில்லா மறைப்பணியாளர்களைப் பெற்றெடுத்த தொட்டில்களில் ஒன்றாக இப்பகுதி விளங்குகின்றது, இப்பகுதியில் பணியாற்றும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் தங்களின் இறையழைத்தலின் சிறப்பை நினைத்துப் பார்க்குமாறு அழைப்பு விடுத்தார். பெரு நாட்டில், தற்போது, 3,361 அருள்பணியாளர்கள், 422 அருள்சகோதரர்கள், 5,568 அருள்சகோதரிகள், மற்றும் 65 திருத்தொண்டர்கள் மறைப்பணியாற்றுகின்றனர். அக்குருத்துவ கல்லூரி தலைவருக்கு, நவீன கலைவண்ணத்திலான திருச்சிலுவை ஒன்றை அளித்து, அவர்கள் அளித்த பரிசுப்பொருளையும் பெற்றுக்கொண்டார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.