2018-01-21 13:12:00

ஹூவான்சாக்கோ கடற்கரையில் திருத்தந்தை திருப்பலி


சன.21,2018. சனவரி 20, இச்சனிக்கிழமை காலை 9.10 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை இரவு 7.40 மணிக்கு, பெரு நாட்டின் வடக்கேயுள்ள துருஹில்யோ நகர் கார்லோஸ் மார்ட்டினெஸ் தெ பினிலோஸ் விமான நிலையம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த விமான நிலையத்திலிருந்து, நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கடற்கரை நகரமான ஹூவான்சாக்கோ  சென்றார் திருத்தந்தை. பரந்து விரிந்த இந்தக் கடற்கரையில், திருப்பலிக்காகக் காத்திருந்த இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் சுற்றி வந்து திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. விண்ணகத்தின் வாயில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்து நிறைவேற்றிய இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார். அன்னை மரியா எப்போதும் உங்களைப் பாதுகாத்து, இயேசுவிடம் அழைத்துச் செல்கிறார் என மறையுரையில் கூறி, விசுவாசிகளை ஆசீர்வதித்து, அந்தக் கடற்கரையிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, புவனோஸ் அய்ரெஸ் பகுதிக்கு பகல் 12 மணியளவில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள புவனோஸ் அய்ரெஸ் பகுதி, தொள்ளாயிரமாம் ஆண்டிலே அமைக்கப்பட்டது. தெர்மல் தயாரிக்கப்படுகின்ற மற்றும் சுற்றுலா தளமாகவும் இது விளங்குகிறது. இப்பகுதி, கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரலில், El Nino கடும் புயலின் பாதிப்புக்குள்ளானது. இதன் பாதிப்புச் சுவடுகளை இன்றும் காண முடிகின்றது. இப்புயலில், நூறாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர், 150க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளின் கூரைகளில் நின்றுகொண்டு உதவிக்காக விண்ணப்பித்தனர். மொத்ததில், ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் என செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு கடும் புயலால் துன்புற்றுள்ள மக்கள் வாழ்கின்ற இப்பகுதியில் திருத்தந்தை திறந்த காரில் சென்றபோது, முழுவதும் கட்டி முடிக்கப்படாத வீடுகளின் மேல் தளங்களிலிருந்து, முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், பாப்பிறைக் கொடிகளை ஆட்டிக்கொண்டு, பிரான்சிஸ் பிரான்சிஸ் என கத்தினர் என்றும், ஆயிரக்கணக்கான மக்கள், திருத்தந்தையின் காரில் பின்னாலே ஓடினர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. திருத்தந்தையின் காரின் முன்னேயும், பின்னேயும், அறுபது பெரு நாட்டுக் குதிரைகளில் பாதுகாப்புப் பணியினர் அணிவகுத்துச் சென்றனர். புவனோஸ் அய்ரெஸ் பகுதி வழியே சென்று, அம்மக்களை ஆசீர்வதித்து, துருஹில்யோ பேராயர் இல்லம் சென்று மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.