சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ பயணங்கள்

பெரு நாட்டு இறுதித் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

பெரு நாட்டு இறுதித் திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை - AP

22/01/2018 14:41

சன.22,2018. “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி”

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, தீமைகளின் மிகுதியால் அழிக்கப்படவிருந்த மாபெரும் நகருக்குச் செல்லும்படி யோனாவை கடவுள் பணிப்பதைக் காண்கிறோம். இதேப்போல் இயேசுவும் தன் நற்செய்தியை அறிவிக்க கலிலேயாவை நோக்கி செல்வதைக் காண்கிறோம். கடவுள் நம்மையும் சந்திக்க வருகிறார். நாம் எங்கு வாழ்ந்தாலும், நம் தினசரி அலுவல்களிலும், நம் குழந்தைகளுக்கு வழங்கும் கல்வியிலும், நம் ஏக்கங்களிலும், கவலைகளிலும் நம் வீட்டு சூழல்களிலும், தெருக்களிலும் இறைவன் நம்மை சந்திக்க வருகிறார்.

யோனாவிற்கு நிகழ்ந்தது சில வேளைகளில் நமக்கும் நிகழலாம். இத்துன்ப சூழல்களிலிருந்து தப்பியோடுவதற்கான சோதனைகள் வரலாம். வாழ்வை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் நகரங்களில் உள்ளன என நாம் கூறினாலும், அங்கும், மனிதர்களுக்குரிய மதிப்பு வழங்கப்படாமல், ஏழ்மையில் உழலும் மக்களைப் பார்க்கத்தான் செய்கின்றோம். இந்த துன்ப சூழல்களில் குழந்தைகளையும் சிறாரையும் நோக்குகிறோம். இவர்களில், வருங்காலத்தின் முகத்தைப் பார்க்கிறோம். இச்சூழல்களை பார்க்கும்போது, இங்கிருந்து தப்பியோடும் சோதனை பிறக்கிறது. இவர்களோடு ஒருமைப்பாட்டை அறிவிப்பதற்கு பதிலாக, அவர்களைக்குறித்து அக்கறையற்றவர்களாய், அவர்களின் குரல்களுக்கு செவி மடுக்காதவர்களாக, இதயங்களை பாறையாக்கிக் கொள்கிறோம். அதன் வழியாக, அவர்களின் ஆன்மாக்களைக் காயப்படுத்துகிறோம். மற்றவர்களின் துன்பங்களை பகிர்ந்துகொள்ள முன்வராத ஒரு சமூகம், மனிதாபிமானமற்ற ஒரு சமூகம் என திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், இயேசு கலிலேயா நோக்கி பயணிக்கிறார். யோனாவைப்போல் அல்லாமல், இயேசு, துன்பங்கள் நிறைந்த பகுதி நோக்கி கடவுளின் நற்செய்தியுடன் வருகிறார், நம்பிக்கையின் விதைகளை விதைக்கிறார். இறையரசு நம் அருகில் உள்ளது, கடவுள் நம்மோடு உள்ளார் என அறிவிக்கிறார். அவர் தந்த செய்தி, அவரிடமிருந்து, அவரின் சீடர்களுக்கும், பின் இந்நாட்டின் புனிதர்களுக்கும், அவர்களிடமிருந்து, உங்களுக்கும் வந்துள்ளது. பாராமுகம் எனும் உலகளாவிய போக்குக்கு மாற்று மருந்தாக இந்த நற்செய்தி செயல்படட்டும்.  அந்த அன்பின் முன்னால் எவரும் பாராமுகமாக இருக்க முடியாது. இவ்வுலக வாழ்விலேயே நித்திய வாழ்வின் சுவையை அனுபவிக்க தன் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு.

இரக்கம் மீது நம்பிக்கையையும், பிறர் மீது அக்கறையையும் நம்மில் தூண்டும் இறைச்செயல்களைக் காண நம் கண்களை திறக்கிறார், இயேசு. இயேசு நகர்கள் வழியாக நடந்துசெல்கிறார். உங்கள் தவறுகள் குறித்து வருந்துங்கள் என கேட்கிறார். மக்களின் வாழ்வோடு உங்களையும் ஈடுபடுத்திக்கொண்டு, உங்கள் வரலாற்றை, மீட்பின் வரலாறாக மாற்ற அஞ்சவேண்டாம் என அனைவரிடமும் கேட்கிறார்.

நம் தெருக்களிலும் அவர் தொடர்ந்து நடந்து வருகிறார். நேற்றுபோல் இன்றும் நம் மனக்கதவுகளை அவர் தட்டுகிறார். முறிந்துபோனவற்றை உடன்பிறந்த உணர்வு வழியே சரியாக்கவும், ஒன்றிப்பின் வழியே அநீதிகளை தோற்கடிக்கவும், அமைதியின் கருவிகள் வழியே வன்முறைகளை அழிக்கவும், நம்பிக்கையின் விளக்கு நம்மில் கொளுந்து விட்டு எரியச்செய்யவும்,  நம் கதவுகளைத் தட்டுகிறார், இயேசு.

நம்பிக்கையை நம்மில் வளர்க்க, இயேசு, நம் தெருக்களில் நடந்து வருகிறார். இறையரசு நம்மிடையே உள்ளது என்கிறார். விழியிழந்தோர் பார்க்கவும், முடமானவர்கள் நடக்கவும், தொழுநோயாளிகள் குணமாகவும், செவியிழந்தோர் கேட்கவும், நம் இரக்கத்தின் வழியாக, அதற்குரிய சூழல்களை உருவாக்கித்தரவும் அஞ்சவேண்டாம் என கேட்கிறார், இயேசு. கடவுள் நம்மைச் சந்திக்க வருவதில் தயக்கம் காட்டமாட்டார். இறைவாக்கினர் இல்லையெனில், நம்பிக்கையை நம்மால் எப்படி தூண்டமுடியும்? ஒன்றிப்பு இல்லையெனில் வருங்காலத்தை நம்மால் எப்படி எதிர்கொள்ளமுடியும்? துணிச்சலுடைய சாட்சியங்கள் இல்லையெனில், இயேசு எவ்விதம் உலகின் அனைத்து மூலைகளிலும் நுழைய முடியும்? நாம் எங்கெங்கு வாழ்கிறோமோ, அங்கெல்லாம் இரக்கம் செயல்படவேண்டும் என இறைவன் விரும்புகிறார்.

உங்கள் நகர்களில் அவரோடு இணைந்து நடைபோட வேண்டும் என இயேசு கேட்கிறார். அவரின் மறைபோதரகராக மாறும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார், இயேசு. 'அகமகிழுங்கள் கடவுள் உங்களாடு' என்ற குரல், எங்கும் எதிரொலிக்க உதவுங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

22/01/2018 14:41