சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ விவிலியம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 1

கானா திருமணத்தில், இயேசுவும், அன்னை மரியாவும்... - RV

23/01/2018 15:05

“தை பிறந்தால், வழி பிறக்கும்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன், தை பிறந்தது. வழியும் பிறந்திருக்கும் என்று நம்புகிறோம். ‘வழி பிறக்கும்’ என்ற சொற்றொடரில்தான் எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்! வழி பிறக்கும் என்று சொல்லும்போது, நம் உள்ளங்களில் பல கனவுகள் வலம் வருகின்றன. குழந்தை பிறக்கும்; குழந்தை படித்து, நன்கு தேர்ச்சி பெறும்; தேர்ச்சி பெற்று பட்டதாரியான மகளுக்கு, மகனுக்கு வேலை கிடைக்கும்; வேலை கிடைத்த கையோடு, வாழ்க்கைத் துணையும் கிடைக்கும்; திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் வாய்ப்பு வரும்... இப்படி, எத்தனை, எத்தனை கனவுகள்?

தை பிறந்தால், வழி பிறக்கும் என்ற வார்த்தைகளை வைத்து இணையதளத்தில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர், இந்த பழமொழியை, "தை பிறந்தால், வலி பிறக்கும்." என்று பதிவு செய்திருந்தார். இன்னொருவர், அதைச் சுட்டிக்காட்டி, "நண்பா, அது வலி அல்ல, வழி." என்று திருத்தி எழுதி இருந்தார்.

தமிழில், வலி, வளி, வழி என்று மூன்று வார்த்தைகளும் உள்ளன. வலி என்றால், துன்பம், வளி என்றால், காற்று, வழி என்றால், பாதை. தை பிறந்தால், பாதை பிறக்கும் என்பதைத்தான் நம் பழமொழியில் சொல்லிவருகிறோம். ஆனால், அந்த வழி பிறக்க, வலிகளைத் தாங்கவேண்டும். வீசுகின்ற வளியை, சூறாவளியைச் சமாளிக்கவேண்டும். இவையின்றி, எளிதாக வழி பிறக்காது. அப்படி வலிகளைத் தாங்கி, சூறாவளிகளைச் சமாளித்து, இரு வேறு குடும்பங்கள் ஒன்றிணைந்து, இளையோரின் வாழ்வில் நல்லதொரு வழியை உருவாக்கும் ஒரு முயற்சி, நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்கள். நாம் துவக்கத்தில் பட்டியலிட்ட கனவுகளிலேயே மிகக் கடினமான கனவுகள் என்று நமது பழமொழிகள் உணர்த்தும் இரு கனவுகள்: "கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்." எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், கல்யாணங்கள் நடக்கின்றன, வீடுகளும் கட்டப்படுகின்றன.

தை மாதத்தில், பல இல்லங்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். தை பிறந்திருக்கும் இவ்வேளையில், நம் விவிலியத் தேடலில், ஒரு கல்யாணத்தில் நிகழ்ந்த புதுமையை மையப்படுத்தி, நாம் தேடலை மேற்கொள்வது பொருத்தமாகத் தெரிகிறது. ஆம்... கானா என்ற ஊரில் நிகழ்ந்த திருமணத்தில், இயேசு, தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றிய புதுமையில், (யோவான் 2:1-11) நம் தேடல் பயணத்தை இன்று துவக்குகிறோம். யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் புதுமைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன், யோவான் நற்செய்தியில் காணப்படும் புதுமைகளைக் குறித்து பொதுவாக புரிந்துகொள்ள முயல்வோம்.

யோவான் நற்செய்தி, மற்ற மூன்று நற்செய்திகளைவிட, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட நற்செய்தி. மேலும், இயேசுவின் சீடர்களிலேயே மிக இளையவராகவும், இயேசுவுக்கு நெருங்கியவராகவும் இருந்த யோவான், ஏனையச் சீடர்களைப்போல் மறைசாட்சிய மரணம் அடையாமல், முதுமையடைந்து உயிர்துறந்தவர் என்றும் கருதப்படுகிறார். அவர், இயேசுவின் வாழ்வை, மிக ஆழமாக அசைபோட்ட வண்ணம் வாழ்ந்திருக்கவேண்டும். எனவே, அவர், இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்தனவற்றை  நற்செய்தியாகத் தொகுத்தபோது, அதை, வெறும் வரலாற்றுப்பதிவாக மட்டும் தருவதற்குப் பதில், அந்நிகழ்வுகளை, ஓர் இறையியல் கண்ணோட்டத்தோடு பதிவு செய்துள்ளார்.

இயேசு ஆற்றிய புதுமைகளை, நற்செய்தியாளர் யோவான், 'செமெயியோன்' (Semeion) அதாவது, "அரும் அடையாளங்கள்" என்றே குறிப்பிடுகிறார். கானா திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியபின், "இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது" (யோவான் 2:11) என்று குறிப்பிட்டுள்ளார். அதேவண்ணம், இந்த நற்செய்தியில் நாம் வாசிக்கும் இரண்டாவது புதுமை, அரச அலுவலரின் மகனை இயேசு குணமாக்கியப் புதுமை. அந்தப் புதுமையின் இறுதியிலும், "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே" (யோவான் 4:54) என்று குறிப்பிடுகிறார், யோவான்.

முதல் அரும் அடையாளம், கலிலேயாவில் உள்ள கானாவில் நடந்ததென்றும், இரண்டாவது அரும் அடையாளம், இயேசு 'கலிலேயாவுக்கு வந்தபிறகு' நடைபெற்றது என்றும் யோவான் கூறியிருப்பது, நமக்குச் சில உண்மைகளை உணர்த்துகின்றது. இவ்விரு அரும் அடையாளங்களும் கலிலேயாவில் நிகழ்ந்தன என்பதைக் கூறும் யோவான், இவ்விரு புதுமைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இயேசு மற்ற இடங்களிலும் புதுமைகள் செய்திருக்கிறார் என்பதை, சொல்லாமல் சொல்கிறார். எனவேதான், "வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன" (யோவான் 20:30-31) என்று தன் நற்செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த நற்செய்தியின் பிற்சேர்க்கையான 21ம் பிரிவின் இறுதியிலும், "இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்" (யோவான் 21:25) என்று யோவான் நற்செய்தி நிறைவு பெறுகிறது.

இயேசு செய்த அரும் அடையாளங்கள் அனைத்தையும் தான் எழுதவில்லை என்பதையும், அவற்றை எழுதினால் இவ்வுலகமே கொள்ளாது என்பதையும் தெளிவாகக் கூறும் புனித யோவான், தன் நற்செய்தியில் ஏழு அரும் அடையாளங்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். இந்த ஏழு அரும் அடையாளங்களை பதிவு செய்வதற்கு அவர் கூறும் காரணம், இயேசுவை, இறைமகனாக, மெசியாவாக நாம் நம்பவேண்டும் என்பதே. இந்த ஏழு அரும் அடையாளங்களில், கானா திருமணத்தில் நிகழ்ந்த புதுமையும், தன் நண்பரான இலாசரை இயேசு உயிர்ப்பித்த புதுமையும், யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 5000 பேருக்கு இயேசு உணவளித்த புதுமை, யோவான் நற்செய்தி உட்பட நான்கு நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள ஒரே புதுமை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

கானா திருமண நிகழ்வுக்குத் திரும்புவோம். யோவான் நற்செய்தியில், இந்நிகழ்வு, பின்வரும் வரிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

யோவான் 2: 1-3

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார்.

கானாவில் திருமணம். இயேசுவின் தாய் அங்கு இருந்தார். இயேசுவும், சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தனர். இரசம் தீர்ந்துவிட்டது... இப்போது நாம் வாசித்த நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் இவை.

மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பிறப்பைக் குறித்த விவரங்களை வழங்கும்போது, இளம்பெண் மரியாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். யோவான் நற்செய்தியிலோ, அன்னை மரியா, கானா திருமணத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறார். மேலும், மத்தேயுவும், லூக்காவும் அவரை மரியா என்று பெயரிட்டு குறிப்பிடும்போது, யோவான் அவரை, 'இயேசுவின் தாய்' என்ற அடைமொழியால் மட்டும் குறிப்பிடுகிறார். "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற அந்த அறிமுக இறைவாக்கியம், அன்னை மரியாவைக் குறித்து, அழகான, ஆழமான உண்மைகளை கற்றுத்தருகின்றது.

இயேசுவும், அவரது சீடரும் அழைப்பு பெற்றிருந்தனர் என்று கூறும் யோவான், மரியாவைக் குறித்துப் பேசும்போது, “இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்” என்று மிக எளிமையாகக் கூறியுள்ளார். இயேசுவின் தாய்க்கு அழைப்பு இருந்ததா? சொல்லப்படவில்லை. ஆனால், அவர் அங்கு இருந்தார். இருந்தார் என்று சொல்லும்போது, திருமணத்திற்கு முன்பே அவர் அங்கு சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.

ஒரு குடும்பத்தில் திருமணம் என்றால், மிக மிக நெருங்கியவர்கள், ஒரு சில நாட்களுக்கு முன்னரே அங்கு சென்று, அந்தத் திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்வா், இல்லையா? நமது கிராமங்களில், சின்ன ஊர்களில், தாராள மனம் கொண்ட சில நல்ல உள்ளங்கள், அந்த ஊரில் திருமணம் நடைபெறுகிறது என்றால், அவர்கள் சொந்தம், சொந்தமில்லை என்பதையோ, அழைப்பு வந்தது, வரவில்லை என்பதையோ, கொஞ்சமும் சிந்திக்காமல், அந்த வீடுகளுக்கு உரிமையுடன் சென்று, தாங்களாகவே, வேலைகளை, ‘இழுத்துப் போட்டுக்கொண்டு’ செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர், திருமணங்கள் முடிந்ததும், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அந்த இடத்தை விட்டு வெளியேறுவதையும் பார்த்திருக்கிறோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த நோக்கமும் இல்லாமல், வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செயல்படும் இத்தகைய அன்பு உள்ளங்கள், உலகத்தில் இன்றும் நடமாடுகிறார்கள். இதுவே நாம் சிந்திக்க வேண்டிய முதல் புதுமை!

வாழும் இந்தப் புதுமைகளின் முன்னோடியாக, நம் அன்னை மரியா கானா திருமணத்தில் கலந்துகொண்டார். மரியாவை இந்த கோணத்தில் நாம் பார்க்க உதவியாகத்தான், நற்செய்தியாளர் யோவான், "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்று, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எளிமையாக, எப்போதும் நடக்கும் ஒரு செயலாக, அன்னை மரியாவை இவ்வாறு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

"இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற இந்த வாக்கியத்தில் புதைந்திருக்கும் இன்னும் சில பாடங்களைப் பயில்வதற்கும், இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்பு பெற்றிருந்ததைப் புரிந்துகொள்வதற்கும், நாம் அடுத்த தேடலில் முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

23/01/2018 15:05