2018-01-23 15:24:00

புலம்பெயர்வோர் நுழைய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதற்கு...


சன.23,2018. பிரான்ஸ் நாட்டிலிருந்து Calais எல்லைப் பகுதி வழியாக இங்கிலாந்திற்குள் வரும் புலம்பெயர்வோரின் விண்ணப்பங்களை விரைவில் முடிக்க வழிசெய்யும் Sandhurst ஒப்பந்தம் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆயர்கள்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கும் இவ்வொப்பந்தம் குறித்து மகழ்ச்சியை வெளியிட்ட ஆயர்கள், ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வைக்கும் விண்ணப்பங்கள், தற்போது ஒரு மாதத்திலும், குழந்தைகளின் விண்ணப்பங்கள் 25 நாட்களிலும் ஆராயப்பட்டு, இங்கிலாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி, குடும்பங்கள் இணைவதற்கு உதவும் நற்செய்தி என தெரிவித்துள்ளனர்.

குடிபெயர்வோர் மீது கருணையுடன் செயல்படும் இந்த ஒப்பந்தத்தை அரசு, மற்றும், சமூகத் தலைவர்கள் சிறந்த முறையில் செயல்படுத்துவதன் வழியாக, குடிபெயர்வோர் குடும்பங்களுக்கு உதவ முடியும் எனவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

குடிபெயர விரும்பும் புலம்பெயர்ந்தோர், நேரடியாக தொடர்புகொள்ள உதவும் வகையில், இங்கிலாந்து சட்ட விதிகளைத் தளர்த்தியிருப்பது, மற்றும், குற்றக் கும்பல்களுக்கு எதிராகவும், மனித வியாபாரத்திற்கு எதிராகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கென பிரான்ஸ் நாட்டிற்கு 4 கோடியே 50 இலட்சம் பவுண்டுகளை இங்கிலாந்து கொடுத்து உதவ முன்வந்துள்ளது போன்றவைகளுக்கும், தங்கள் பாராட்டை வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆயர்கள்.

புலம்பெயர்வோர் நாட்டிற்குள் நுழைவதற்கும், குடும்பங்கள் ஒன்றிணைவதற்கும் உதவும் இந்த புதிய Sandhurst ஒப்பந்தம், பெரியவர்கள் துணையின்றி நாட்டிற்குள் நுழைய முயலும் சிறார்களுக்கு எந்தவித உதவியையும் ஆற்றுவதில்லை என்ற கவலையையும் தங்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.