2018-01-24 15:06:00

சமூகத் தொடர்பு உலக நாள் - திருத்தந்தையின் டுவிட்டர்


சன.24,2018. "தீமையற்ற தப்புச் செய்திகள் என்று எதுவும் கிடையாது; பொய்மையை நம்புவது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிடப்பட்டது.

எழுத்தாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாவலரென கொண்டாடப்படும், ஆயரும் மறைவல்லுனருமான புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் அவர்களின் திருநாள், சனவரி 24 கொண்டாடப்படும் வேளையில், சமூகத் தொடர்பு உலக நாளுக்கென திருத்தந்தையர் செய்தி வெளியிடுவது வழக்கம்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 52வது உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பொய்யான செய்திகள் வெளியாவதை மையப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தான் வடிவமைத்துள்ள இந்த உலகச் செய்தியைத் தழுவி, திருத்தந்தை அவர்கள், இன்றைய டுவிட்டர் செய்தியை, ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

@pontifex என்ற முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகள், சனவரி 24 வரை 1440 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது என்பதும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை, ஆங்கிலத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 1 கோடியே 64 இலட்சத்து 19,088 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.