2018-01-24 15:08:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 9


சன.24,2018. கிறிஸ்தவ வரலாற்றில் கி.பி.325ம் ஆண்டு நடைபெற்ற முதலாம் நீசேயா பொதுச்சங்கம் முதல், கி.பி.787ம் ஆண்டில் ஆரம்பித்த இரண்டாம் நீசேயா பொதுச்சங்கம் வரை நடந்த ஏழு பொதுச்சங்கங்களில் கலந்துகொண்ட திருஅவைத் தலைவர்கள், திருஅவையின் மரபுக் கோட்பாடுகளை ஏகமனதாக ஏற்று, கிறிஸ்தவத்தில் அமைதியையும், ஒற்றுமையையும் உருவாக்குவதற்கு முயற்சித்தனர். கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையும், கத்தோலிக்கத் திருஅவையும், இந்த ஏழு பொதுச்சங்கங்களையும், முறைப்படி நடந்த பொதுச்சங்கங்கள் என்று ஏற்றுக்கொண்டன எனச் சொல்லப்படுகிறது. ஆறாவது மற்றும் ஏழாவது பொதுச்சங்கத்திற்கு இடைப்பட்ட காலத்தில், கி.பி.692ம் ஆண்டில், ஒரு பொதுச்சங்கம் நடைபெற்றுள்ளது. இதில், திருஅவையின் நிர்வாகமுறை, திருவழிபாடு, திருஅவைச் சட்டங்கள் போன்ற விவகாரங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன. ஆனால், இறையியல் குறித்த விவகாரம் இடம்பெறவில்லை. இந்தப் பொதுச்சங்கத்தை, கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவை மட்டும், பொதுச்சங்கம் என்று ஏற்றுக்கொண்டது. இதனை பொதுச்சங்கம் என ஏற்காத கத்தோலிக்கத் திருஅவை, முதல் ஏழு பொதுச்சங்கங்களுக்குப் பின்னர், பல பொதுச்சங்கங்கள் நடைபெற்றுள்ளன என்று கருதுகிறது.

கால்செதோன் எனும் நகரில், கி.பி.451ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதியிலிருந்து, நவம்பர் முதல் தேதி வரை நடந்த பொதுச் சங்கம், கிறிஸ்தவ வரலாற்றில் நடந்த நான்காவது பொதுச்சங்கமாகும். கால்செதோன் நகரம், தற்போதைய துருக்கி நாட்டின் Kadiköy நகரமாகும். உரோமைப் பேரரசர் மார்சியன் என்பவரால் கூட்டப்பட்ட இப்பொதுச்சங்கத்தில், ஏறக்குறைய 520, ஆயர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தொடக்ககாலப் பொதுச்சங்கங்களில் பெரியது மற்றும், ஆவணங்கள் சிறப்பாக பதிவுசெய்யப்பட்ட பொதுச்சங்கமாக, இது கருதப்படுகிறது. கி.பி.325ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நீசேயா விசுவாச அறிக்கை, கான்ஸ்தாந்திநோபிள் அறிக்கை, நெஸ்தோரியு என்பவரின் தப்பறைக் கோட்பாட்டுக்கு எதிராக, கிறிஸ்துவின் மனித மற்றும் இறை இயல்புகளை வலியுறுத்தி முதுபெரும் தந்தை புனித சிரில் எழுதிய இரு கடிதங்கள் போன்றவை, கால்செதோன் பொதுச்சங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிறிஸ்து ஒரே இயல்பை மட்டுமே கொண்டிருக்கின்றார் என்ற கோட்பாடு, புறக்கணிக்கப்பட்டது. மேலும், கடும்தவ துறவிகளையும் அருள்பணியாளர்களையும் பாதித்த விவகாரங்களில் ஒழுங்கு விதிமுறைகளை அறிவித்ததுடன், எருசலேம், கான்ஸ்தாந்திநோபிள் ஆகிய இரண்டையும், முதுபெரும் தந்தையர் திருஆட்சிப்பீடமாகவும் இப்பொதுச்சங்கம் அறிவித்தது.

கிறிஸ்தவ திருஅவையில் நடைபெற்ற ஐந்தாவது பொதுச்சங்கம், இரண்டாவது கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம் ஆகும். இப்பொதுச்சங்கம், கான்ஸ்தாந்திநோபிள் நகரத்தில், பைசான்டின் பேரரசர் முதலாம் ஜஸ்டீன் என்பவரால் கூட்டப்பட்டு, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை Eutychius அவர்கள் தலைமையில், கி.பி.553ம் ஆண்டு மே 5ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 152 பிரதிநிதிகளில் 16 பேர் மட்டுமே மேற்கத்திய ஆயர்கள். இத்தாலியிலிருந்து எவருமே கலந்துகொள்ளவில்லை. இப்பொதுச்சங்கத்தில், நெஸ்தோரியு என்பவரின் கிறிஸ்து இயல் பற்றிய தப்பறைக் கோட்பாட்டை ஆதரித்த சில எழுத்தாளர்கள் மற்றும் கடிதங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்பொதுச்சங்கத்திற்குப் பின்னும், கிறிஸ்து இயல் பற்றிய தப்பறைக் கோட்பாடுகள் நிறுத்தப்படவில்லை. இயேசு கிறிஸ்து, மனித மற்றும் இறை இயல்புகளைக் கொண்டு ஒரே ஆளாய் இருக்கிறார் என்ற பேருண்மைக்கு எதிரான கோட்பாடுகள் நிலவி வந்தன. இப்பிரச்சனைக்கு முடிவுகாண்பதற்கு விரும்பிய பேரரசர் 4ம் கான்ஸ்ட்டைன் (Constantine IV), கிழக்கு மற்றும் மேற்கு இறையியலாளர்கள் அவையைக் கூட்ட விரும்பினார். இதனால் இந்த அவைக்கு, திருத்தந்தை டோனுஸ் (Donus) அவர்கள், தனது பிரதிநிதிகளை அனுப்புமாறு கி.பி.678ம் ஆண்டில் கேட்டுக்கொண்டார். ஆனால், திருத்தந்தை டோனுஸ் அவர்களுக்குப்பின் பணியேற்ற திருத்தந்தை Agatho அவர்கள், 680ம் ஆண்டில் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா சமயத்தில், 120 இத்தாலிய ஆயர்களைக் கொண்டு உரோம் நகரில் பேரவையைக் கூட்டி, இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடினார். இப்பேரவையில் கிறிஸ்து இயல் பற்றிய தப்பறைக் கோட்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து பற்றிய பேருண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் பேரவையின் தீர்மானங்களுடன் திருத்தந்தை Agatho அவர்களின் பிரதிநிதிகள், 680ம் ஆண்டு செப்டம்பரில் கான்ஸ்தாந்திநோபிள் சென்றனர்.

பேரரசர் 4ம் கான்ஸ்ட்டைன் அவர்களின் ஆணையின்பேரில், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை ஜார்ஜ் அவர்கள், கான்ஸ்தாந்திநோபிள் பேரரசரின் மாளிகையில் 680ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பொதுச்சங்கம் ஒன்றைக் கூட்டினார். இதில், இடம்பெற்ற 18 அமர்வுகளில், முதல் ஏழு அமர்வுகளில் பேரரசரும் கலந்துகொண்டார். 681ம் ஆண்டு மார்ச் 7ம் தேதியன்று நடந்த எட்டாவது அமர்வில், திருத்தந்தை Agatho அவர்களின் போதனையை இப்பொதுச்சங்கம் ஏற்றது. இறுதியில், கிறிஸ்து இயல் கோட்பாட்டில், பேரரசர் மற்றும் 174 பேரவைத் தந்தையர் கையெழுத்திட்டனர். திருத்தந்தை Agatho அவர்களுக்குப்பின் பதவியேற்ற திருத்தந்தை 2ம் லியோ அவர்கள், இப்பொதுச்சங்கத் தீர்மானத்தை இலத்தீனில் மொழிபெயர்க்கச் சொல்லி, மேற்குப் பகுதியில் பணியாற்றிய அனைத்து ஆயர்களும் அதில் கையெழுத்திடச் செய்தார். பேரரசர் 4ம் கான்ஸ்ட்டைனும், பேரரசரின் ஆணையாக, பேரரசு முழுவதும் இதனை அறிவித்தார். கிறிஸ்துவின், மனித, இறை இயல்புகள் பிரச்சனைக்கு முடிவுகண்ட  இப்பொதுச்சங்கம், கிறிஸ்தவத்தின் ஆறாவது மற்றும், 3வது கான்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம் ஆகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.