2018-01-24 14:56:00

மறைக்கல்வியுரை : சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கு ஊக்கம்


சன.,24,2018. இத்தாலியில் குளிர்காலம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், கடந்த நான்கு நாட்களாக வெப்பம் சிறிது அதிகரித்திருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, திருத்தந்தையின் இவ்வார புதன் மறைக்கல்வி உரை, தூய பேதுரு வளாகத்திலேயே இடம் பெற்றது. சிலே மற்றும் பெரு நாடுகளில், தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து திங்கள்கிழமை பிற்பகலில் உரோம் நகர் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையில், தன் திருத்தூதுப் பயணம் குறித்தே கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

முதலில் திருப்பாடல் 108லிருந்து, 'என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது;  நான் பாடுவேன். உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு! முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை!' என்ற வரிகள் வாசிக்கப்பட, தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! சிலே மற்றும் பெரு நாடுகளுக்கான என் அண்மை திருத்தூதுப் பயணத்தில், இறைவனின் திருப்பயணிகளான மக்களைச் சந்திக்கும் மகிழ்ச்சியைப் பெற்றேன். அந்நாடுகளின் பல்வேறுபட்ட வளங்களை மதித்து, சமூக இணக்க வாழ்வில் வளர்வதற்கு என் ஊக்கத்தை வழங்கினேன். அனைவரின் குரல்களுக்கும், குறிப்பாக, ஏழைகள், இளையோர், முதியோர், குடியேற்றதாரர், மற்றும், இப்பூமியின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டியதன் அவசியத்தை சிலே நாட்டில் வலியுறுத்தினேன். புனிதப்படுத்தல் மற்றும் புதுப்பித்தலின் பாதையில், தலத்திருஅவைக்கு என் ஊக்கத்தை வழங்கினேன். புனித Alberto Hurtadoவின் எடுத்துக்காட்டை பின்பற்ற அழைப்பு விடுத்து, அந்த வழியில், அனைவரையும் ஒன்றிணைக்கும் நீதியுடன்கூடிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் இளையோர் தங்கள் பங்கை ஆற்ற அவர்களுக்கு உதவுமாறு கல்வியாளர்களுக்கு ஊக்கமூட்டினேன். பெரு நாட்டு சமூகம் சந்தித்துவரும் பெரும் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில், ஒத்துழைப்பையும் ஒன்றிப்பையும் கட்டியெழுப்ப, அந்நாட்டின் ஆன்மீக, கலாச்சார, மற்றும், இயற்கை வளங்கள் உதவமுடியும் என்ற நம்பிக்கையை, நான் அங்கு வெளியிட்டேன். அமேசான் பகுதி மக்களுடன் இடம்பெற்ற என் சந்திப்பின்போது, ஒருவருக்கொருவர் இடையேயான மதிப்பு, சுற்றுச்சூழல் மீதான அக்கறை போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தினேன். இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள துருகில்யோ நகரில் அம்மக்களை சந்தித்தபோது, போதிய குடியிருப்பு வசதிகளின்மை, வேலைவாய்ப்பின்மை, கல்வியின்மை, குற்றங்களின் அதிகரிப்பு போன்ற சமூக பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தேன். அனைத்து மக்களுக்கும் அமைதி, நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பின் தூதுவர்களாக இருக்க முயன்று, மனமாற்றம் மற்றும் மறைப்பணி பாதயில் நடந்து கொண்டிருக்கும் திருஅவைக்காக, புனிதர்களின் பரிந்துரையை வேண்டி, அதேவேளை, அவர்களின் எடுத்துக்காட்டை பின்பற்றும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்து, சிலே மற்றும் பெரு நாடுகளுக்கான திருப்பயணத்தை, லீமா நகரில் நான் நிறைவு செய்தேன்.

இவ்வாறு, தென் அமெரிக்காவின் இரு நாடுகளுக்கான தன் திருத்தூதுப் பயணம் குறித்து இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்படும் இந்நாட்களில், போசே கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பின் குழு ஒன்று, இப்புதன் மறைக்கல்வி உரையில் கலந்து கொண்டுள்ளதை குறிப்பிட்டு, தன் தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இன்றைய புதன் மறைக்கல்வி உரையின்போது, காங்கோ சனநாயக குடியரசிற்கென, தனிப்பட்ட விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார் திருத்தந்தை. கவலைதரும் செய்திகள் இந்நாட்டிலிருந்து தொடர்ந்து, வந்த வண்ணம் உள்ளன. இந்நாட்டில் மோதல்களில் ஈடுபட்டுள்ளோர், எல்லாவிதமான வன்முறைகளையும் கைவிடவேண்டும் என்ற என் விண்ணப்பத்தை மீண்டுமொருமுறை புதுப்பிக்கின்றேன். இந்நாட்டின் அமைதிக்கும், சமூகப் பொதுநலனுக்கும் பங்களிக்கவே திருஅவை ஆவல் கொள்கின்றது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.