2018-01-25 15:22:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு – திருத்தந்தையின் டுவிட்டர்


சன.25,2018. சனவரி 25, இவ்வியாழனன்று திருத்தூதரான புனித பவுல் மனம் மாறிய திருவிழாவும், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவும் சிறப்பிக்கப்படும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி, நமது ஒன்றிப்பை வலியுறுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.

"இறைவன் நம்மை எவ்விதம் காண்கிறாரோ, அதே வண்ணம், நாம், ஒருவர் ஒருவரைக் காண்பதற்கும், நாம் அனைவரும், சகோதரர்கள், சகோதரிகள் என்பதை உணர்வதற்கும் செபம் வழிவகுக்கிறது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழன் வெளியானது.

மேலும், சனவரி 24, கொண்டாடப்பட்ட புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் அவர்களின் திருநாளையொட்டி, 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்ற மையப்பொருளில் சமூகத் தொடர்பு உலக நாள் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, அச்செய்தியின் சில கருத்துக்களை, டுவிட்டர் செய்தியாக இப்புதன் மாலையிலும், இரவிலும் வெளியிட்டார்.

"பொய்மை என்ற நோய்கிருமிக்கு எதிரான அடிப்படை மருந்து, உண்மையால் நம்மை நாமே தூய்மைப்படுத்துவது" என்ற டுவிட்டர் செய்தியை மாலை 5.30 மணிக்கு திருத்தந்தை வெளியிட்டார்.

இரவு 8.30 மணிக்கு வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்படும் அமைதியின் இதழியலை வளர்ப்பதற்கு அனைவரையும் அழைக்கிறேன்" என்ற வேண்டுகோளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.