2018-01-26 15:09:00

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி


சன.26,2018. உண்மை மற்றும் துணிச்சலான சாட்சிய வாழ்வுடன், விசுவாசம் வழங்கப்பட  வேண்டும் என்றும், விசுவாசம், திருஅவையின் தாய்மையில் வழங்கப்படுகின்றது என்றும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவை அறிவிப்பதற்கு, திருத்தூதர் பவுலடிகளாரின், பிள்ளை, சாட்சியம், தாய்மை ஆகிய மூன்று வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டுமெனவும், விசுவாசத்தை வழங்கும்போது தந்தையராகவும், திருஅவையின் தாய்மையை வெளிப்படுத்தும்போது அன்னையராகவும் இருக்கின்றோம், வாழ்வு இன்றி, வார்த்தைகள் பயனற்றவை என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்களான புனிதர்கள் திமொத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவான இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியில், விசுவாசத்தை மற்றவருக்கு வழங்குதலை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில், புனித பவுல், திமொத்தேயுவுக்கு எழுதிய 2வது திருமடலில், திமொத்தேயுவின் விசுவாசம் வெளிவேடமற்றது என்று குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திமொத்தேயுவை, என் அன்பார்ந்த பிள்ளை என்றும், திமொத்தேயுவின் பாட்டி, பின்னர் அவரின் தாயிடமிருந்து இத்தகைய விசுவாசம், திமொத்தேயுவிடம் விளங்கியது என்றும் கூறினார். 

சாட்சியங்களாக, போதகர்களாக, விசுவாசத்தை வழங்கும் அன்னையர்களாக, பெண்களாக வாழ ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று சொல்லி, மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.