2018-01-26 15:14:00

திருத்தந்தை, ஹெய்ட்டி குடியரசுத்தலைவர் Moise சந்திப்பு


சன.26,2018. ஹெய்ட்டி குடியரசின் அரசுத்தலைவர், Jovenel Moise அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில், ஏறத்தாழ இருபது நிமிடங்கள் தனியே சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்புக்குப்பின், தன்னுடன் வந்திருந்த, துணைவியார் மற்றும் அரசுப் பிரதிநிதிகளை, திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்த, ஹெய்ட்டி அரசுத்தலைவர், Moise அவர்கள், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர், ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஹெய்ட்டி குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், ஹெய்ட்டி கத்தோலிக்கத் திருஅவை, இளையோர் உட்பட, அந்நாட்டின் பொது நலனுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவைகள் குறித்தும், புலம்பெயர்ந்தோர் விவகாரம் குறித்தும், சமூக நல்லிணக்கத்திற்கு உரையாடலின் அவசியம் குறித்தும், இச்சந்திப்பில் பேசப்பட்டதென்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

இச்சந்திப்பில், Amoris Laetitia, Evangelii Gaudium, Laudato Si' உலக அமைதி தினச் செய்தி ஆகியவற்றை ஹெய்ட்டி அரசுத்தலைவரிடம் பரிசாகக் கொடுத்து, அந்நாட்டினருக்கு வாழ்த்தும் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாடுகாண் பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்களின் முதல் பயணத்தில், 1492ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஹெய்ட்டி தீவைக் கண்டுபிடித்தார். இத்தீவை இவர் முதலில் இந்தியா அல்லது ஆசியா என நினைத்தார் என்று சொல்லப்படுகின்றது. இந்நாடு, கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள, Antilles பெரிய தீவுக்கூட்டங்களில் ஒன்றாகும்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டரில், “கிறிஸ்தவ மகிழ்வு, விலைகொடுத்து வாங்க முடியாதது. மாறாக, இம்மகிழ்வு, நம் மகிழ்வின் காரணராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பது மற்றும் விசுவாசத்திலிருந்து பிறக்கிறது” என்ற சொற்களை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.