2018-01-27 15:22:00

உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி


சன.27,2018. “உரோம் மக்களுக்கு குணமளிக்கும் (Salus Populi Romani)” பழம்பெருமைமிக்க அன்னை மரியா திருப்படம், புதுப்பிக்கப்பட்டு உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் வைக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 28, இஞ்ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு, அப்பசிலிக்காவில் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார்.

வத்திக்கான் அருங்காட்சியகத்தின் தொழிற்கூடத்தில், அதன் இயக்குனர் Barbara Jatt அவர்களின் ஒருங்கிணைப்பில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா தலைமைக்குரு கர்தினால் Stanislaw Rylko அவர்கள் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில், இந்தப் படம் புதுப்பிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அன்னை மரியா திருப்படத்தின் வரலாற்றுப் பழமை மாறாமல், மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன், சிறந்த வல்லுனர்களைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரோம் மேரி மேஜர் பசிலிக்காவின் பவ்லின் அல்லது பொர்கேசே எனப்படும் சிற்றாலயத்தில், 13ம் நூற்றாண்டில் இப்படம் வைக்கப்பட்டது. 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னும், அப்பயணத்தை நிறைவுசெய்த பின்னரும், இந்த அன்னை மரியிடம் செபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். இதுவரை, ஐம்பதுக்கு மேற்பட்ட முறைகள் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்றுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறு மாலை 4 மணிக்கு, உரோம் நகரின் பொச்சேயா சாலையிலுள்ள புனித சோஃபியா பசிலிக்கா சென்று, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க சமூகத்தைச் சந்திப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.