2018-01-27 14:55:00

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் மனிதாபிமானத்திற்கு சான்றுகள்


சன.27,2018. செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள், மனிதாபிமானத்திற்கு எப்போதும் சான்றுகளாய் விளங்குகின்றனர் என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏறத்தாழ ஏழாயிரம் பணியாளர்களை,  இச்சனிக்கிழமையன்று, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள், நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல சமாரியரை நினைவுப்படுத்தி, வருங்கால மனிதரில் நம்பிக்கையை ஊட்டுகின்றன என்று கூறினார்.

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள், உண்மையான இறைவாக்கினர்களாக, புறக்கணிக்கும் ஓர் உலகைத் தட்டியெழுப்பும் திறமை படைத்தவர்களாக, சொல்லாலும், செயலாலும் சான்று சொல்கிறவர்களாக, சமூகநலத் தன்னலவாதிகளாக உள்ளனர் எனவும் பாராட்டி ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வீணாக்கும் கலாச்சாரம், முகங்களற்ற கலாச்சாரம் என்றும், இக்கலாச்சாரத்தில் பலர் ஒதுக்கப்பட்டு, சிலர் ஏற்கப்படுகின்றனர் என்றும் கூறியத் திருத்தந்தை, இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம், அதன் உலகளாவிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கத்துடன் இணைந்து, மனிதரை மையப்படுத்திய விழுமியத்தை ஊக்குவிக்கின்றது என்றும் கூறினார்.

மனிதாபிமானம், பாரபட்சமின்மை, சமநிலை ஆகிய பண்புகளைக் கொண்டு, இயற்கைப் பேரிடர்கள், புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் பேரிடர்கள் போன்ற துயர நிகழ்வுகளில் இச்சங்கத்தினர் செயல்படுவதைப் பாராட்டிய திருத்தந்தை, பிறரை, நட்பு எனும் கண்ணாடிகளால் நோக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

மனிதம் மிகுந்த ஓர் உலகை அமைக்குமாறும் பரிந்துரைத்த திருத்தந்தை, தேவையில் இருப்போருக்கு உதவும்போது இறந்த, ஒருமைப்பாட்டுணர்வின் மறைசாட்சிகளையும் நினைவுகூர்ந்தார்.

உலகளாவிய செஞ்சிலுவை, மற்றும் செம்பிறைச் சங்கம், 190 தேசிய சங்கங்களுடன் இணைந்து செயலாற்றுவதையும், தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.