2018-01-29 14:48:00

இமயமாகும் இளமை : பட்டதாரி விவசாய இளைஞர்


இளைஞர் சரவணன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, தச்சூர் பகுதியில் ரோஜா சாகுபடி செய்து வருகிறார். படிப்புக்கேற்ற வேலை என்று, படி படியாய் ஏறி சோர்ந்து போகாமல், தனது குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டு புதுமை புகுத்தி வருகிறார் சரவணன். இவர் சொல்கிறார்...எங்கள் பகுதியில் நெல் சாகுபடி பிரபலம் என்பதால், அதை தொடக்கத்தில் செய்து வந்தேன். பின்னர், புதிய சிந்தனைகளையும், நவீன சாகுபடி முறைகளையும் விவசாயத்தில் புகுத்த விரும்பி, அரசு அதிகாரிகளையும், ஏனைய விவசாயிகளையும் சந்தித்துப் பேசினேன். விவசாயத்தில் சில ஆண்டுகளாக ஏற்பட்ட அனுபவம், இவர்களிடமிருந்து கிடைத்த புதிய தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், எனது புதிய விவசாய திட்டங்களை வடிவமைத்தேன். புதிய தொழில்நுட்பமும், நவீன சிந்தனைகளும் எனக்கு கைகொடுத்தன. வாழை, பப்பாளி போன்ற பழங்களை சில ஆண்டுகளுக்கு முன் சாகுபடி செய்தேன். பின்னர், கத்திரிக்காய், மிளகாய், தக்காளி போன்ற காய்கறி சாகுபடியும் நல்ல வருவாய் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளேன். குறிப்பாக ரோஜா மலர் ஆண்டு முழுவதும் சராசரி வருவாய் தருவதாக, அதை சாகுபடி செய்த விவசாயிகள் சொன்ன தகவலின்பேரில் இதை சாகுபடி செய்தேன். பல்வேறு வகையான மலர்களுக்கும், குறிப்பாக, ரோஜா மலருக்கு ஆண்டு முழுவதும் தேவை இருக்கிறது. தொடக்க நிலையிலேயே ரோஜா சாகுபடி இலாபகரமாக உள்ளது. ரோஜாவை பொறுத்தவரை குளிரான பகுதிகளில் நன்கு வளரும். அதேசமயம் மற்ற பகுதிகளிலும் வளரும் தன்மை உண்டு. அதிகமான வெப்பம் இருக்கும் கோடை காலத்தில் அதன் வளர்ச்சியும், மகசூலும் குறைவாக இருக்கும். மற்றபடி வெப்பம் உள்ள பகுதியிலும் ரோஜாவைப் பயிரிட முடியும். ரோஜா செடிகள் வளர்ந்து பலன் தர ஆறு மாதங்கள் வரை ஆகும். தக்க பராமரிப்புடன், கவனத்துடன் கண்காணித்தால் ரோஜா சாகுபடி சிறந்த முறையில் வருவாய் கொடுக்கும். ஏழு ஆண்டுகள்வரை மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.

விவசாயத்தில் புதியன புகுத்தி வரும் இளையோரை ஊக்கப்படுத்துவோம்

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.