2018-01-29 15:00:00

வாரம் ஓர் அலசல்–மனது வைத்தால் எதையும் சாதித்துக் காட்டலாம்


சன.29,2018. பசிபிக் பெருங்கடலின் தென் கோடி பற்றி அறியும் ஆர்வத்தால், ஆங்கிலேய மாலுமி கேப்டன் குக் என்பவர் தலைமையில், ஒரு குழு 1769ம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலில் பயணம் மேற்கொண்டது. அப்போது, Polynesia தீவுக்கூட்டங்களில் ஒன்றான ஹவாய் தீவைச் சேர்ந்த Tupiah என்பவர், அக்குழுவுக்கு ஒரு வரைபடத்தைப் பரிசளித்தார். அதில் பசிபிக் தீவின் தென் பகுதியிலிருந்த எல்லாத் தீவுகளும் குறிக்கப்பட்டிருந்தன. அக்குழு, Tupiahவுடன் தொடர்ந்து பயணம் மேற்கொண்டது. எந்த விதமான கருவியின் துணையும் இல்லாமல், விண்மீன்களின் துணைகொண்டு, பல தீவுகளுக்கும் Tupiah அக்குழுவை அழைத்துச் சென்று வியக்க வைத்துள்ளார். Tupiahவின் முன்னோர்கள் ஆப்ரிக்காவில் வாழ்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே அவர்கள் தக்கைத் தண்டுகளாலான பெரிய படகுகளில் பயணித்து, எந்தவிதக் கருவியின் உதவியும் இன்றி, தென் பசிபிக் பெருங்கடலிலிருந்த எல்லாத் தீவுகளிலும் போய்க் குடியேறியுள்ளனர். இவ்வாறு, மனிதர் ஓரிடத்தைப் பார்க்க வேண்டுமென்றால், எப்பாடுபட்டாவது, எவ்விலை கொடுத்தாவது அங்குச் செல்வதற்கு முயற்சித்து, வெற்றியும் காண்கின்றனர். அதேநேரம் இருக்கும் இடத்திலேயே அரிய சாதனைகளால், சாதாரண வாழ்வை பிரமிப்பானதாக மாற்றிக் காட்டுகிறவர்களும் உள்ளனர்.

சனவரி 26, கடந்த வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இந்தியாவின் 69வது குடியரசு தினத்தையொட்டி, நாட்டின் கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், நடிப்பு, நடனம், இசை உள்ளிட்ட பல கலைகளில் சிறந்து விளங்குவோர்க்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விருது வாங்கியவர்களில், சுபாஷினி மிஸ்திரி, லட்சுமி குட்டி, பாஜு சியாம், சீதாவ்யா ஜோதாதி, அரவிந்த் குப்தா போன்றோர், சாதாரண பின்புலத்தில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வாகியவர்கள். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சுபாஷினி மிஸ்திரி அவர்கள், மேற்கு வங்காளத்தில் 1943ம் ஆண்டு சாதாரண விவசாயக் கூலித்தொழிலாளியின் மகளாய்ப் பிறந்தவர். இவரின் குடும்பத்தில் மொத்தம் 14 பிள்ளைகள். இவரின் தந்தை, வறுமை காரணமாக, பிள்ளைகளுக்கு மூன்றுவேளை உணவளிக்கக்கூட சிரமப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட நேரத்தில், சுபாஷினி மிஸ்திரியின் 12வது வயதில், சந்திரா என்ற விவசாயிக்கு, அவர் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். சுபாஷினி மிஸ்திரி அவர்களின் புகுந்த வீட்டிலும், வறுமை வாட்டியது. இதனால், இவர் வீடுகளில் வேலை செய்து, குடும்ப வறுமையைச் சமாளித்தார். 1971ம் ஆண்டு இவரது கணவர், இரப்பை குடல் அழற்சி நோயால் காலமானார். அப்போது, அரசு மருத்துவமனையும், இவரது கணவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது. இந்த நிகழ்வு சுபாஷினி மிஸ்திரி அவர்களின் நெஞ்சில் வடுவாய் அமைந்தது. நம்மைப்போல் எத்தனை ஏழைகள் இருப்பார்கள்? அவர்களுக்கு நோய் வந்தால் என்ன செய்வார்கள்? என்று சிந்தித்த அவர், ஒரு மருத்துவமனையைக் கட்டி முடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்தார்.

சுபாஷினி மிஸ்திரி அவர்கள், இதற்காக வீடு வீடாகச் சென்று காய்கறி விற்றிருக்கிறார், வீடு கழுவுவது, சுத்தம் செய்வது, செங்கல் சூளையில் வேலை செய்வது போன்ற பல வேலைகளை, இருபது ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்தார். இதில் சேமித்த பணத்தைக் கொண்டு, 1993ம் ஆண்டில் ஏழைகளுக்காக ஒரு மருத்துவமனையைக் கட்டி முடித்திருக்கிறார் சுபாஷினி மிஸ்திரி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களில் ஒருவரை மருத்துவம் படிக்கவைத்து மருத்துவராக்கிவிட்டார் இவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன்னைப் போன்ற ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்று, விடா முயற்சியுடன் இவர் செய்த அரிய செயலும், அதற்காக அவர் மனதில் எடுத்த உறுதியுமே இந்த விருதை அவருக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது. மனிதர் நினைத்தால் எதனையும் முடித்துக்காட்டலாம் என்பதற்கு, பத்மஸ்ரீ சுபாஷினி மிஸ்திரி அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சென்னை, ஆலந்தூர் மின் மயானத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பிரவீனா சாலமன் என்பவரும், இதே நாளில் தேசிய விருது பெற்றுள்ளார். பெரும்பாலும் ஆண்களே பணியாற்றிவரும் மயானப் பணிகளில், பெண் ஒருவர் முதன்முறையாக பணியாற்றுவதை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், சவாலான துறையில் சாதித்த முதல் பெண் என்ற, தேசிய விருதை பிரவீனா அவர்கள் பெற்றுள்ளார். இந்தப் பணியில் சேர்ந்த விவரத்தை அவர் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

செவிலியர் பயிற்சி முடித்திருக்கும் நான், மூட்டுவலி காரணமாக, செவிலியர் வேலையைத் தொடர முடியவில்லை. வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்த எனக்கு, என் அம்மா விஜயலட்சுமி ஊக்கம் அளித்து, இந்திய சமூகநல நிறுவனம் (Indian Community Welfare Organisation) என்ற தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் மத்தியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவதும் அவர்களின் மனக்குறையைக் கேட்டு ஆறுதல் சொல்வதும்தான் என் வேலை. அது எனக்கு நிறைவாக இருந்தது. அப்போதான் மாநகராட்சி சார்பில் சென்னையில் உள்ள சில மின் மயானங்களைப் பராமரிக்கும் ஒப்பந்தப்பணி எங்கள் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. தொண்டு நிறுவனச் செயலாளர் ஹரிஹரன், பெண்கள் மின் மயானத்தைப் பராமரித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதுடன், இருபது பெண்களை அழைத்துப் பேசினார். அதில் நான் மட்டும்தான் இந்த வேலையைச் செய்ய முன்வந்தேன். அண்ணாநகரில் உள்ள வேளங்காடு மின் மயானத்தில் கடந்த 2014ம் ஆண்டில் வேலைக்குச் சேர்ந்தேன்.  இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சாங்கியங்களும் சம்பிரதாயங்களும் கிறிஸ்தவப் பெண்ணான எனக்குப் புதிதாக இருந்தது. நான் பயந்த சுபாவம் கொண்டவள். இருட்டைப் பார்க்கவே மாட்டேன். முதன்முறையாக இடுகாட்டில் நுழைந்தது திகிலாக இருந்தது. அந்த மயானத்தில் நான் ஒருத்தி மட்டுமே பெண். நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மயானத்தில் சாப்பிடப் பிடிக்காமல் பட்டினியாக இருந்தேன். ஆனால், நான் செய்யும் வேலை புனிதமானது எனத் தோன்றியதில் இருந்து, எனக்குள் இருந்த பயம் மறைந்துவிட்டது. சில நேரம் சின்னக் குழந்தைகளின் உடல்கள்கூட வரும். அப்போதெல்லாம் என் குழந்தைகள் நினைவுக்கு வருவார்கள். அந்த நொடியின் வேதனையைச் சொல்லத் தெரியவில்லை. இந்த வேலை காரணமாக என் குழந்தைகள் எதிர்கொள்ளும் கேள்விகள்தாம் வேதனையாக இருக்கும். அப்படி ஒருமுறை என்னைப் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியை என் குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் சென்று அவர்களின் ஆசிரியர்களிடம் காண்பித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த அந்த ஆசிரியர், “ஏன் உங்க அம்மாவுக்கு வேற வேலையே கிடைக்கலையா?” எனக் கேட்டிருக்கிறார். குழந்தைகள் இதை என்னிடம் சொன்னபோது மனதே உடைந்துவிட்டது. படித்தவர்களுக்கே நான் செய்யும் வேலை குறித்த சரியான புரிதல் இல்லாதபோது படிக்காதவர்கள் கேட்கும் கேள்விகளுக்காகச் சங்கடப்படுவது அவசியமற்றது. எந்தச் சூழ்நிலையிலும் வேலையை விடவேண்டும் என நினைத்ததில்லை. மற்ற வேலைக்குச் சென்றிருந்தால் நான் இந்த அளவுக்குச் சமூகத்தால் கவனிக்கப்பட்டிருப்பேனா எனத் தெரியாது. இந்த உயர்வுக்குக் காரணம் மயான பூமிதான். தேசிய விருதைப் பெறுவதற்காக டெல்லி சென்றது உற்சாகமான அனுபவமாக இருந்தது. நீ செய்யும் வேலையையும் அதில் உன் அர்ப்பணிப்பையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது’என என் கணவர் பாராட்டினார். அது என் உற்சாகத்தை அதிகரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், எஸ்.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருபவர் ஆறு வயது சிறுமி தாரணி. குடியரசு தின விழாவில், திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்கள், சிறுமி தாரணிக்கு, ‘தூய்மை இந்தியா’ விருது வழங்கியுள்ளார். திறந்த வெளியில் கழிப்பிடம் செல்வது அவமானம் என்று ஆசிரியர் கூறியதை மனதில் ஆழமாகப் பதிய வைத்து, வீட்டில் கழிப்பறை கட்டவேண்டும் என பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார் தாரணி. பிறகு பார்க்கலாம் என்று பதில் சொன்ன தந்தை ராஜபாண்டியிடம், வீட்டில் அவசியம் கழிப்பறை கட்ட வேண்டும் என, சிறுமி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், ஒரு கட்டத்தில் வீட்டில் கழிப்பறையைக் கட்டியுள்ளார் ராஜபாண்டி. அடுத்து, தினமும் மது குடித்துவிட்டு, வீட்டில் தனது தாயிடம் சண்டை போடும் தந்தையிடம் மதுப்பழக்கத்தை விட்டுவிடும்படி அறிவுரை கூறியுள்ளார் தாரணி. மதுப்பழக்கத்தை விடாமல் தொடரவே ஒருநாள் தந்தையிடம், இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால் நானும், அம்மாவும் தாத்தா வீட்டுக்குச் சென்று விடுவோம்’என இறுதியாக எச்சரித்துள்ளார் தாரணி. தனது மகளின் வற்புறுத்தலால் ஒரு கட்டத்தில் தனது மதுப் பழக்கத்தை கைவிட்டார் ராஜபாண்டி. மகளின் இந்தச் சாதனை பற்றிப் பெருமைப்படும் தாய், ஐந்து ஆண்டுகளாக எனது கணவரிடம் நான் போராடிப் பெறாததை, என் மகள் சில மாதங்களிலேயே சாதித்து விட்டார் என்று சொல்கிறார். தாரணியின் அப்பாவும் அம்மாவும் கூலித்தொழிலாளர்கள்.

இதே நாளில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற 98 வயது ‘யோகா’ நானம்மாள் அவர்கள், நூறு வயதைக் கடந்தாலும் பயிற்சியை கைவிடமாட்டேன் என உறுதிபடச் சொல்லியிருக்கிறார். இவர், 1971ம் ஆண்டு முதல் கோவை, கணபதி பாரதி நகரில் ‘ஓசோன் யோகா’ மையம் என்ற பெயரில், யோகா பயிற்சிக்கூடத்தை நடத்தி வருகிறார்.

வயது, படிப்பு, சமூகநிலை போன்ற வரம்பின்றி, மனது வைத்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு, குடியரசு தின நாளில் விருது பெற்றவர்கள் சான்றுகளாக விளங்குகிறார்கள். மனிதரின் மனதில் புதைந்துள்ள எதிர்மறை எண்ணங்களும், வீண் பயங்களுமே, வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளாக உள்ளன. இவற்றை அகற்றினாலே மலைகளை நகர்த்திய தெளிவு, மனதுக்குள் மலரும். மனதின் உள்ளே எரியும் கனல்தான் வெளியே இருக்கும் தடைகளை நகர்த்தும் தார்மீக பலத்தைத் தருகிறது. ஆம். மனதில் உறுதி இருந்தால், மலைகளை நகர்த்தி, நினைத்ததைத் தொடலாம்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.