2018-01-30 15:51:00

ஆப்ரிக்காவில் பசி நீங்க நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை


சன.30,2018. ஆப்ரிக்க கண்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பசிக்கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு, அக்கண்டத்தின் அனைத்து நாடுகளிடையே ஒருமைப்பாடும், ஒத்துழைப்பும் அவசியம் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

எத்தியோப்பியத் தலைநகர் Addis Ababaவில் நடைபெற்ற, ஆப்ரிக்க ஒன்றியத்தின் முப்பதாவது உச்சி மாநாட்டிற்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், வேளாண்மை வளர்ச்சி மற்றும் பகிரப்படும் வளமை குறித்த Malabo அறிக்கை செயல்படுத்தப்பட வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்புவதாகவும், இம்மாநாட்டிற்காகத் திருத்தந்தை செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு கடிதம் அனுப்பிய கர்தினால் பரோலின் அவர்கள், 2025ம் ஆண்டுக்குள் ஆப்ரிக்காவில் பசியை அகற்றுவதற்கு அனைத்து நாடுகளும் முயற்சிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

2014ம் ஆண்டு நடைபெற்ற ஆப்ரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டில், Malabo அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்ரிக்காவில் வேளாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த அறிக்கை, 2025ம் ஆண்டுக்குள், இக்கண்டம், தன்னிறைவு பெற்ற இடமாக மாறுவதற்கும் பரிந்துரைகளைக் கொண்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.