2018-02-01 14:44:00

இமயமாகும் இளமை : 20 வயதில் சொந்த வீடு வாங்கிய இளைஞர்


இங்கிலாந்தின் Yate நகரைச் சேர்ந்த இளைஞர் Jennie Crockart அவர்கள், தனது இருபதாவது வயதிலேயே பெற்றோரின் உதவியின்றி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கியிருக்கிறார். தனது இந்த சாதனை பற்றி Bristol Post தினத்தாளிடம், இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார் ஜென்னி. “பதினாறு வயதில் பள்ளியில் படிக்கும்போதே சொந்தமாக சம்பாதிக்க முடிவு செய்தேன். சாக்லெட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி, உணவு இடைவேளைகளில் விற்பனை செய்தேன். இதன்மூலம் மாதம் 3,600 ரூபாய் சம்பாதித்தேன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் சென்றுவிட்டேன். ஐந்து விதமான பகுதி நேர வேலைகளில் சேர்ந்தேன். இவற்றின் மூலம் கிடைத்த 45 ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் சேமிக்க ஆரம்பித்தேன். தொழில் தொடர்பான படிப்பிலும் சேர்ந்தேன். நான் எளிமையான உடைகளைத்தான் அணிவேன். வெளியே சாப்பிட மாட்டேன். நண்பர்களுடன் விருந்துகளுக்குச் செல்ல மாட்டேன். மூன்றே ஆண்டுகளில் ஏறத்தாழ 16 இலட்சம் ரூபாயைச் சேமித்துவிட்டேன். நகரைவிட்டுச் சற்று தொலைவில் இருந்த இரண்டு படுக்கையறை வீடு, ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்ததை அறிந்தேன். வங்கியில் வீட்டுக்கடன் வாங்குவதற்கான முன்பணம் என்னிடம் இருந்ததால், உடனே கடன் கிடைத்தது. வீட்டை வாங்கி, நான் விரும்பியபடி புதுப்பித்தேன். இருபத்தோராவது வயதில் என் சொந்த வீட்டில் குடியேறிவிட்டேன். என் வாழ்க்கையில் இந்தத் தருணம் அற்புதமானது. என் பெற்றோர் எப்போதும் எனக்கு அதிகமான பணத்தைக் கொடுத்ததே இல்லை. நீ சம்பாதித்து, உன் விருப்பப்படி வாழ்ந்துகொள் என்றுதான் சொல்வார்கள். இன்று அவர்கள் சொன்னது போலவே வீட்டை வாங்கிவிட்டேன். இவ்வாறு சொல்லியுள்ள ஜென்னியின் திறமையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆம். சிந்தனையும், செயல்களும் ஒன்றுபட்டால், வாழ்வின் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு, ஜென்னி போன்ற இளையோர் சான்றுகள். சுவாமி விவேகானந்தர் சொல்கிறார் - உன்னை வலிமை உடையவன் என்று நீ நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.