2018-02-01 13:52:00

சீனத் தலத்திருஅவைக்கும் திருப்பீடத்திற்கும் இடையே உறவு


பிப்.01,2018. சீனத் தலத்திருஅவையைப் பொருத்தமட்டில் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் திருப்பீடம் தன் முடிவுகளையும், செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் என்பதை, சீனாவில் வாழும் கத்தோலிக்கர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சீனத் தலத்திருஅவையில் நிகழ்வனவற்றில், திருப்பீடத்தின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்று, அண்மைய நாட்களில் பரவிவரும் செய்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Vatican Insider என்ற செய்திப் பிரிவுக்கு, இப்புதனன்று வழங்கிய ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனத் தலத்திருஅவையில், திருப்பீடம் மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும், மேய்ப்புப்பணி என்ற ஆன்மீக அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், இதில், அரசியல் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் தெளிவாக்கினார்.

சீன அரசு அதிகாரிகளுடன் திறந்த மனதோடு உரையாடல்களை மேற்கொள்வதே திருப்பீடத்தின் முக்கிய நோக்கம் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், திருப்பீடத்தின் முயற்சிகள் அனைத்தும், நற்செய்தி விழுமியங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளன என்று எடுத்துரைத்தார்.

சீன அரசு அதிகாரிகளுடன் நிலவும் இறுக்கமானச் சூழலை வெல்வதற்கு மோதல்கள் எவ்வகையிலும் உதவாது என்றும், உரையாடல் மட்டுமே பிரச்சனைகளைத் தீர்க்கும் என்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2007ம் ஆண்டு, சீன கத்தோலிக்கர்களுக்கு எழுதிய மடலை, கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

பல துன்பங்களுக்கு மத்தியில், தங்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல், செபத்தில் நிலைத்திருக்கும் சீனக் கத்தோலிக்கர்கள், எவரையும் தீர்ப்பிடாமல், எவரோடும் மோதல்களை மேற்கொள்ளாமல், தொடர்ந்து செபிக்குமாறு கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியின் இறுதியில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.