2018-02-03 15:29:00

ஆண்டவரோடு நடத்தும் சந்திப்பில் அனைத்தும் ஆரம்பிக்கின்றன


பிப்.03,2018. விசுவாசப்பயணத்தில் பகிர்ந்துகொள்கின்ற மற்றும் இறைவார்த்தையைக் கேட்பதற்கு ஏக்கமாக இருக்கின்ற சகோதர, சகோதரிகளுடன் உண்மையான சந்திப்பை நிகழ்த்துமாறும், வாழ்வில் தொழில்நுட்பம் ஒருபோதும் உயர்ந்த இடத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருபால் துறவியரிடம் கூறினார்.

இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழா மற்றும், அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் 22வது உலக நாளை முன்னிட்டு, பிப்ரவரி 02, இவ்வெள்ளி மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆயிரக்கணக்கான இருபால் துறவியருக்கு, திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை, தன் மறையுரையில், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

இறைவனோடும், மற்றவரோடும் செலவழிக்கும் நேரத்தைவிட, தொழில்நுட்பங்களுக்கு ஒருபோதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இக்காலத் தொழில்நுட்பத்தின் அதிவேக முன்னேற்றம், பல நேரங்களில் மற்றவர் மீது அச்சத்தை ஏற்படுத்தி, சந்திப்புக்களுக்கு பல கதவுகளை மூடுகின்றது என்றும், பல்பொருள் அங்காடிகளும், இணையதளத் தொடர்புகளும் எப்போதும் திறந்திருக்கின்றன என்றும் கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வில் இவ்வாறு அமையக் கூடாது என்றும், இறைவனால் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகள், என் வரலாற்றில் ஓர் அங்கம் என்றும், அவர்கள் கொடைகளாக நோக்கப்பட்டு, பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், துறவியரிடம் திருத்தந்தை கூறினார்.

நம் சகோதர, சகோதரிகளின் கண்களை உற்றுநோக்குவதைவிட, நம் கைபேசித் திரைகளை ஒருபோதும் பார்க்காதிருப்போம் என்றும், ஆண்டவரை நோக்குவதைவிட, நம் மென்பொருள்களை அதிகம் நோக்காதிருப்போம் என்றும் கூறியத் திருத்தந்தை, துறவிகள், இவ்வுலக வாழ்வில் சிக்குண்டு இருப்பதற்கு எதிராகவும் எச்சரித்தார்.

அர்ப்பண வாழ்வும், கற்பு, ஏழ்மை, பணிவு ஆகிய வார்த்தைப்பாடுகளும், என்றென்றும் நிலைத்திருக்கும் இறைவனிடமிருந்து எவ்வாறு நொடிப்பொழுதில் அடித்துச் செல்லப்படுகின்றன என்பதையும் விளக்கிய திருத்தந்தை, இவ்வுலக வாழ்வு, தன்னல இன்பங்களாலும் ஆசைகளாலும் நிறைந்துள்ளது என்றும் கூறினார்.

இந்த விழா, கீழைத் திருஅவைகளில், சிலவேளைகளில் சந்திப்பின் விழா என அழைக்கப்படுகின்றது என்றும், அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் அழைப்பு, ஆண்டவரோடும், அவரின் அழைப்போடும் சந்திப்பு நிகழ்த்துவதிலிருந்து பிறப்பதாகும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.     

வயது முதிர்ந்த சிமியோன் போன்று, கத்தோலிக்கர், தங்கள் கரங்களில் ஆண்டவரை ஏந்தியிருப்பது நல்லது என்றும், ஆண்டவரோடும், நம் சகோதர, சகோதரிகளோடும் சந்திப்பு நடத்தும்போது, நம் இதயங்கள், கடந்த காலம் அல்லது எதிர்காலம் பற்றி கவலைப்படாமல், நிகழ்காலத்தில் நிலைத்திருக்கும் என்றும், மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.