2018-02-03 15:24:00

பிப்ரவரி 04, உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள்


பிப்.03,2018. வளரும் நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் துன்புறும்வேளை, இந்நோயைத் தடுப்பதற்கும், ஆரம்ப நிலையிலே இந்நோயைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை எடுப்பதற்குரிய வசதிகள் குறைபடுகின்றன என்று, IAEA எனப்படும், உலகளாவிய அணு சக்தி நிறுவனத் தலைவர் Yukiya Amano அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 04, இஞ்ஞாயிறன்று, உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு உரைத்த Amano அவர்கள், 28 ஆப்ரிக்க நாடுகளில், ரேடியோ சிகிச்சை கருவி ஒன்றுகூட இல்லையென்றும், புற்றுநோய்க்குரிய சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.

புற்றுநோய்க்குரிய சிகிச்சைகள் அதிகமாகத் தேவைப்படும் பகுதிகளில், அதற்குரிய வசதிகள் கிடைப்பதற்கு, உலகளாவிய அணு சக்தி நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது என்றும், Amano அவர்கள் கூறினார்.

உலகளவில் இடம்பெறும் இறப்புகளுக்கு புற்றுநோயும் ஒரு காரணம். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ ஒரு கோடியே நாற்பது இலட்சம் பேர் இந்நோயால் புதிதாகத் தாக்கப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும், 80 இலட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர். இந்நோயால் புதிதாகத் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, அடுத்த 20 ஆண்டுகளில்,  ஏறத்தாழ எழுபது விழுக்காடு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.