2018-02-05 15:20:00

ஆராதனை வழிபாட்டில் அமைதியில் செபிக்க கற்றுக்கொள்வோம்


பிப்.05,2018. இறைவனின் உடன்படிக்கை குறித்த நினைவுகளை இதயத்தில் தாங்கியவர்களாக, இறை ஆராதனை எனும் மலை நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம் என, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், கோவிலுக்குச்சென்று இறைவனின் உடன்படிக்கைப் பெட்டகத்தை தூக்கிப் பிடிக்குமாறு மன்னர் சாலமோன் விடுத்த அழைப்புப் பற்றிக் கூறும் முதல் வாசகத்தை யொட்டிய சிந்தனைகளுடன் தன் மறையுரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனை அன்புகூர்வதையும் அயலாரை அன்புகூர்வதையும் அடிப்படையாகக்கொண்ட சட்டங்களை உள்ளடக்கிய உடன்படிக்கைப் பெட்டகத்தைக் குறித்து நினைவூட்டி, இறைவனை ஆராதிப்பது குறித்து, அனைவருக்கும் கற்பிக்க வேண்டியது, அருள்பணீயாளர்களின் கடமை என்று கூறினார்.

அமைதியில் வழிபடுவதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபிப்பதற்கும், இறைபுகழ் பாடுவதற்கும், இறைவனைப் புகழ்வதற்கும் விசுவாசிகளுக்கு கற்றுக்கொடுக்கும் நாம், இறைவனை வழிபட அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோமா என்ற கேள்வியையும், அருள்பணியாளர்களுக்கு முன்வைத்தார் திருத்தந்தை.

ஆராதனை வழிபாட்டில் அமைதியில் செபிக்க கற்றுக்கொள்வதுடன், பிறருக்குச் செவிமடுக்கவும் மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவா, எனக்குச் செவிமடுத்து, என் பாவங்களை மன்னித்தருளும் என, இறைவனை நோக்கி வேண்டி, நம் இறை ஆராதனைகளை மேற்கொள்வோம் என, தன் மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.