2018-02-05 09:47:00

பாலியல்முறைகேட்டு இலக்கியங்களுக்கு எதிராக மணிலா இளையோர்


பிப்.03,2018. பாலியல்முறைகேடுகளுக்கு இட்டுச்செல்லும் படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா கத்தோலிக்க இளையோர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிப்ரவரி 14ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் Valentine நாளையொட்டி, உண்மையான, களங்கமில்லாத அன்பை ஊக்குவித்து வரும் மணிலா கத்தோலிக்க இளையோர், இவ்வாண்டின் இந்நாளை முன்னிட்டு, ஒழுக்கநெறி வாழ்வைச் சீர்குலைக்கும், இலக்கியங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.

ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில், இனிப்புகளை வழங்கிவரும், இனிப்பு வழங்கும் இளையோர் குழுவின் தலைவர் அந்தோனி ஜேம்ஸ் பெரெஸ் கூறுகையில், உண்மையான அன்பின் பகைவனாக, பாலியல்முறைகேட்டு இலக்கியம் உள்ளது எனவும், இந்த இலக்கியங்களின் எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து இளையோரைப் பாதுகாப்பதற்கு இவ்வாண்டில் முயற்சிகள் எடுப்பதாகவும் கூறினார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் விவிலிய வசனங்கள் இணைக்கப்பட்ட இனிப்புக்களை, இந்த இளையோர் அமைப்புகள் வழங்கி வந்தன என்று, யூக்கா செய்தி கூறியுள்ளது.     

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.