2018-02-05 15:07:00

வாரம் ஓர் அலசல் – உன்னால் முடிந்ததைச் செய்


பிப்.05,2018. உன்னால் முடிந்ததைச் செய். அதாவது, பெரிய காரியத்தைச் செய்ய நினைத்தேன், ஆனால் முடியவில்லை என்று வருந்திக்கொண்டிருப்பதைவிட, உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய் என்று, பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள், அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தனது நூலில், தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வை மூதாட்டி அவர்கள், அறஞ்செய விரும்பு என்றுதான் சொன்னாரேயன்றி, அறம் செய் என்று சொல்லவில்லை. ஒரு செயலைச் செய்ய முடியாதவரும் இருக்கலாம். எனவே ஒரு காரியத்தைச் செய்ய விரும்புவதே பெரிது. ஒரு செயலைச் செய்ய முடிந்தால் செய். முடியாவிட்டால் அதை விரும்பு. விரும்புவது என்ற சொல்லே, நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும் என்றும் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில், வறுமைகோட்டிற்குக் கீழே வாழ்கின்ற ஏழை மக்களுக்கு இரண்டு படுக்கை அறை தொகுப்பு வீடுகளை அரசு வழங்கி வருகிறது. இந்த வீடுகளை ஆய்வு செய்வதற்காக, அம்மாநில அமைச்சர் கே.டி.இராமா ராவ் அவர்கள், சிரிசில்லா மாவட்டத்திற்கு, கடந்த வெள்ளிக்கிழமையன்று(பிப்.02) சென்றார். அப்போது முஸ்தாபாத் பகுதியில், கோணிப்பைகளைக் கூரையாக அமைத்து, வெறும் செங்கற்களால், பூச்சு வேலைகூட இல்லாத குடிசை வீடு ஒன்று இருந்தது. இடிந்து விழும் நிலையில் இருந்த அந்த வீட்டை பார்த்த அமைச்சர் இராமா ராவ் அவர்கள், வீட்டின் உரிமையாளர், ஷபீனா பேகம் என்ற பெண் என்பதை அறிந்தார். அப்பெண்ணை அழைத்த அவர், “கூரைகூட இல்லாமல் உள்ள இந்த வீட்டிற்குப் பதிலாக, அரசு வீட்டை பெற்றுக் கொள்ளலாமே?” எனக் கேட்டார். அதற்கு அந்தப் பெண், சிறிதும் தயங்காமல், “ஐயா, இந்த என் வீடு, இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின்கீழ் எனக்கு முந்தைய அரசு வழங்கியது. எனக்காவது இந்த குடிசை வீடு உள்ளது. இதுகூட இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த இரண்டு படுக்கை அறை வீடுகளை வழங்குங்கள்” எனக் கூறினார். இதை கேட்ட அமைச்சர் இராமா ராவ் நெகிழ்ந்துபோய், அந்த பெண்ணின் வீட்டிற்குப் புதிய கூரைபோட்டு புதுப்பித்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவராகச் சுடர்விடும் ஷபீனா பேகம் போன்ற  மனநிலையுள்ள பலர், சப்தமின்றி நற்செயல்களை ஆற்றி வருகின்றனர். தொழுநோயாளரின் தோழன் என அழைக்கப்படும், திருவண்ணாமலை மணிமாறன் அவர்கள், கடந்த பதினேழு வருடங்களாக, தொழுநோயாளர்களின் நலனிற்காகத் தன்னை அர்ப்பணித்து, தொண்டாற்றி வருகிறார் என்று செய்திகளில் வாசித்தோம். துணிகள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்துவரும் மணிமாறன் அவர்கள், ஒரு சமயம் ஆன்மீகத் தேடலுக்காக அகில இந்திய அளவில் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்றிருந்தபோது, அவருக்கு புனித அன்னை தெரசா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பார்த்து, அவரது சேவைகளை அறிந்த பிறகு அவரையே மானசீகக் குருவாகக் கொண்டு, தொழுநோயாளிகளின் நலனிற்காகப் பாடுபட ஆரம்பித்தார் மணிமாறன். திருவண்ணாமலை பகுதியில் கவனிப்பாரின்றி குப்பை மேட்டில் வீசப்பட்ட பல தொழுநோயாளர்களை அணுகி, அவர்களுக்கு வேண்டிய மருத்துவ முதலுதவிகளைச் செய்து, பின் அவர்களைச் சுத்தப்படுத்தி, வாகனம் மூலம் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை பெற ஏற்பாடு செய்கிறார். பலர் குணமாகி பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு, தங்கள் குடும்பங்களுக்கே திரும்பியுள்ளனர். குணமானாலும் ஏற்க மறுத்து குடும்பத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களுக்கு, இவரே உணவு உடை கொடுத்து பராமரித்து வருகிறார். இறந்தவர்களுக்கு இவரே பிள்ளையாக இருந்து இறுதிச் சடங்கும் செய்து வருகிறார். இவரது இந்தச் சேவை திருவண்ணாமலையில் மட்டுமின்றி, தமிழகம், கேரளா, ஆந்திரா வரை நீண்டு வருகிறது. உலக மக்கள் சேவை மையம் என்ற அமைப்பின் மூலம், தன்னைப் போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்களை, ஒவ்வொரு ஊரிலும் உருவாக்கி, இந்தச் சேவையை செய்து வருகிறார் மணிமாறன். பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ள இவர், கடந்த சனவரியில், திருவண்ணாமலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சிறந்த சமூக சேவகர் விருதினையும் பெற்றுள்ளார். விருதோடு கிடைக்கும் பணத்தை வைத்து, தான் பிறந்த தலையாம்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏழைப்பெண்களுக்கு தையல்மெஷின்களும், உடலளவில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிளும் வாங்கித் தந்துள்ளார், மணிமாறன்.

இவ்வாண்டு இந்திய குடியரசு தின விழாவில் 14 பெண்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் ஒருவரான 75 வயது நிரம்பிய லஷ்மி குட்டி அவர்களின் மருத்துவச் சேவைக்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மூலிகை மூதாட்டி என அழைக்கப்படும் லஷ்மி குட்டி அவர்கள், காணி என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இவர், நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆசிரியராக இருக்கிறார். இந்தத் துறை தொடர்பாகக் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்துள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில், பொன்முடிக்கு அருகில் அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இவர் வாழ்ந்து வருகிறார். இவருடைய கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் இரயில்வேயில் பணியாற்றுகிறார். இவர், ஐந்நூறுக்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். விஷமுறிவு மருந்து மூலம் பலருடைய உயிரைக் காப்பாற்றியுள்ளார். “எல்லா நோய்களுக்கும் தேவையான மருந்துகள் இயற்கையிடம் உள்ளது”என்கிறார் லஷ்மிகுட்டி.

இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள, 98 வயது நிரம்பிய நரசம்மா அவர்கள், கர்நாடக மாநிலம் தும்கூட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் பிரசவம் என்பது மறுபிறப்புதான். அந்த அளவுக்குச் சிக்கலானது பிரசவம். நரசம்மா அவர்கள், தனி மனிதராக, தனது 77 வருட சேவையில் 1,500க்கும் மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்திருக்கிறார். இவர், தனது இருபதாவது வயதில் தற்செயலாகப் பிரசவம் பார்ப்பவராக மாறினார். தன் அத்தையின் பிரசவத்துக்கு உதவினார். சிறு நகரங்களில்கூட மருத்துவமனைகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில்கூட நரசம்மாவைத் தேடிப் பலரும் வருகிறார்களாம். நரசம்மா அவர்கள், இந்தச் சேவைக்குப் பணம் வாங்குவதில்லையாம். மேலும், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தவ்வா ஜோடதி அவர்கள், ஆற்றிவரும் தேவதாசிகள் மீட்புப் பணிக்காக, பத்ம விருது பெற்றுள்ளார். 44 வயது நிரம்பிய சித்தவ்வா, இதுவரை 3,600 தேவதாசிப் பெண்களை மீட்டுள்ளார். 500 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார். ஏழு வயதில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்ட சித்தவ்வா, தேவதாசி முறைப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தார். அவர்களை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்த இவர், அதற்காக ‘மாஸ்’என்ற அமைப்பைத் தொடங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாம் கேட்டறிந்த இவர்கள் எல்லாரும், தங்களால் செய்ய முடிந்ததை விரும்பினர், செய்தனர். இந்தக் காரியத்தைச் செய்ய நினைத்தேன், ஆனால் முடியவில்லையே என்று வருந்திக்கொண்டிருப்பதைவிட, செய்ய முடிந்ததைச் செய்யலாம். அவற்றுள் ஒன்றாக, ஆன்மீகத் தலைவர்கள் கூறுவது செபம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், உலகின் அமைதிக்காகச் செபிக்குமாறு நம் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார். 

உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் கடுமையான ஆயுத மோதல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. எனவே, பிப்ரவரி 23, தவக்காலத்தின் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமையை, உலகின் அனைத்து கிறிஸ்தவரும், அமைதிக்கான செபம் மற்றும் நோன்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன். இந்நாளை, சிறப்பாக, காங்கோ சனநாயக குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளின் மக்களுக்காக அர்ப்பணிப்போம். கத்தோலிக்கர் அல்லாத மற்றும், கிறிஸ்தவர் அல்லாதவர்களையும் இதே கருத்துக்காக இந்நாளை அர்ப்பணிக்க அழைக்கின்றேன். அப்பாவி மக்கள் வேதனையிலும், துயரத்திலும் எழுப்பும் அழுகுரலை, நம் இறைத்தந்தை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கின்றார். நாமும் இந்த அழுகுரலைக் கேட்போம். அமைதிக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று, இறைவன் முன்னிலையில், நம் மனசாட்சியிடம், கேள்வி கேட்குமாறு உருக்கமாக விண்ணப்பிக்கின்றேன். நிச்சயமாக நம்மால் செபிக்க முடியும். செபிப்பதோடு மட்டுமல்லாமல், நம் ஒவ்வொருவரையும் சார்ந்துள்ள முறையில், வன்முறைக்கு மறுப்புச் சொல்ல முடியும். வன்முறை வழியாக அடையும் வெற்றிகள் போலியானவைகளே. அதேநேரம், அமைதிக்காக உழைப்பது, எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்று திருத்தந்தை கூறியுள்ளார். காங்கோ சனநாயக குடியரசில் இடம்பெறும் சண்டையில், குறைந்தது 40 இலட்சம் பேரும்,  தென் சூடானில் 20 இலட்சம் பேரும் புலம்பெயர்ந்துள்ளனர். திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதுபோல், உலக அமைதிக்காகச் செபிப்போம். ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டுக்கொண்டு, இல்லாதவருக்கு அரை ஏக்கர்கூட கொடுக்க விரும்பாதவர், இறுதியில் அனுபவிக்கப்போவது வெறும் ஆறடிதான். இந்த ஆறடி நிலத்திலும், மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள். எனவே, வாழ்வின் உண்மை நிலையை உணர்ந்து, வாழும்போதே, நம்மால் செய்ய முடிந்த காரியங்களை விரும்புவோம், அவற்றை ஆற்றுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.