சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ விவிலியம்

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 3

கானா திருமணத்தில் கலந்துகொண்ட இயேசுவும் மரியாவும்

06/02/2018 14:43

கானாவில் நிகழ்ந்த திருமண விழாவில் மீண்டும் கலந்துகொள்வோம். கல்யாணப் பந்தி மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. இயேசுவும் சீடர்களும் பந்தியில் அமர்ந்திருந்தனர். இயேசு, அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டதைப்பற்றி சென்ற தேடலில் ஒரு கோணத்தில் சிந்தித்தோம். மற்றொரு கோணத்தில் இன்று சிந்திப்போம்.

திருமணங்கள், என்றால், மக்கள் மகிழ்வுடன் கூடிவந்து கொண்டாடும் இடங்கள்.  நாம் வாழும் இன்றைய உலகிலோ, வரதட்சணை என்ற பெயரில், திருமணங்கள், வியாபார ஒப்பந்தங்களாக மாறிவருவதால், இந்த மகிழ்வு தொலைந்துவருவதைக் காண்கிறோம். இருப்பினும், எளிய முறையில் நடைபெறும் கிராமப்புறத் திருமணங்கள், இன்னும் மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றன. மக்கள் மகிழ்வுடன் கூடியிருக்கும் இடமே, இறைவன் இருக்கும் இடம். அதனால், இயேசு அந்த திருமணத்தில் கலந்து கொண்டது, பொருள்மிகுந்த ஓர் அடையாளமே!

படைப்பின் சிகரமாய் மனிதர்களை இறைவன் படைத்தபோதே, தான் மக்களோடு வாழ விழைந்ததை இறைவன் அழுத்தம் திருத்தமாய், ஆணித்தரமாய் சொல்லிவைத்தார். மனித உறவுகளிலேயே மிக நெருக்கமான, அழகான இலக்கணமாக திருமணம் விளங்குவதால், அந்த இலக்கணத்தில் தன் முத்திரையைப் பதிக்க இறைமகன் இயேசு கானா திருமணத்தில் கலந்துகொண்டது, பொருத்தமான செயல்தானே!

மேலாண்மை (Management) எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் இன்றைய உலகில், செயல்திறமை, வேகம் இவற்றை மையமாக, முக்கியமாகக் கருதும் நம் தலைமுறையினர், வேறொரு கேள்வியை எழுப்பலாம். உலகத்தை மீட்கவந்த இறைமகனுக்கு இருக்கப்போவதோ மூன்றாண்டுகள். அந்த மூன்றாண்டுகளில், ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல், மறையுரை நிகழ்த்தி, புதுமைகள் செய்து, மக்களை மீட்பதற்கு பதிலாக, ஒரு வாரம் நீடிக்கும் கல்யாண விழாவில் இயேசு நேரத்தை வீணாக்கலாமா? என்ற கேள்வி எழலாம்.

இயேசுவைப் பொருத்தவரை, இது வீணாகும் நேரம் அல்ல, புனிதமாகும் நேரம். அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள். அவற்றில், 30 ஆண்டுகள், அவர், எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நாசரேத்தில், ஓர் எளிய குடும்பத்தில், தன்னையே கரைத்துக்கொண்டார் அந்த இறைமகன். சாதாரண, எளிய, அன்றாட வாழ்வில், இறைவனின் பிரசன்னம் எப்போதும் உள்ளது என்ற உண்மையை, இயேசு, தன் 30 வருட வாழ்வின் வழியே சொல்லித் தந்தார். அதன் தொடர்ச்சியாக, கானா திருமணத்தில் முழு ஈடுபாட்டுடன் அவர் கலந்துகொண்டதால், அந்தச் சூழலைப் புனிதமாக்கிக்கொண்டிருந்தார்.

கல்யாண பந்தியில், சீடர்களுடன் அமர்ந்திருந்த இயேசுவிடம், அன்னை மரியா வருகிறார். தாழ்ந்த குரலில் ஏதோ சொல்கிறார். இயேசுவும், பதிலுக்கு, ஏதோ சொல்கிறார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை, யோவான் நற்செய்தி இவ்வாறு கூறுகிறது:

யோவான் 2: 3-4

இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

இந்த உரையாடலிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய, கற்றுக் கொள்ளவேண்டிய சில பாடங்கள் உள்ளன. நமக்கு ஏதாவது ஒரு பொருள் தேவை என்றால், நம் தேவையை எடுத்துச்சொல்லி, பொருட்களை வாங்குவோம், அல்லது பெறுவோம். அதற்கு பதில், நம்மிடம் ஒரு பொருள் இல்லை என்று மட்டும் நாம் சொன்னால், அந்தப் பொருள் நமக்குக்கிடைத்துவிடுமா என்பது நிச்சயமில்லை. ஒரு கற்பனை காட்சியின் வழியே இதைப் புரிந்துகொள்ள முயல்வோம்:

வீட்டுத்தலைவர் ஒருவர் மளிகைக் கடைக்குப் போகிறார். கடைக்காரர் அவரிடம், "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கும்போது, வீட்டுத்தலைவர், "எனக்கு ஒரு கிலோ அரிசி, கால் கிலோ சர்க்கரை குடுங்க" என்று சொல்வார். இதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக, "கடைக்காரரே, எங்க வீட்டுல அரிசி இல்ல. சர்க்கரை இல்ல.." என்று மட்டும் அவர் சொன்னால், கடைக்காரர் அவரை ஏற இறங்கப் பார்ப்பார்.

அன்னை மரியா, திருமண வீட்டில் எழுந்த தேவையைச் சொல்லிய விதம் இப்படித்தான் இருந்தது. தன் மகனிடம் சென்று, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். இறை வல்லுனர்கள் பலர், மரியாவின் இந்தக் கூற்றை, அழகான ஒரு செபம் என்று கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது, சாதாரணமான, எதார்த்தமான ஒரு கூற்று. அதை செபம் என்ற கொணத்தில் எண்ணிப்பார்க்க நாம் தயங்கலாம்.

ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இயேசு சொல்லித்தந்த ‘வானகத்திலுள்ள எங்கள் தந்தையே’ என்ற செபத்தைப் பார்த்தால், நம் தயக்கம் நீங்கி, தெளிவு பிறக்கும். பெரும் இறையியல், மெய்யியல் தத்துவங்களெல்லாம் இந்த செபத்தில் இடம்பெறவில்லை. அங்கு இயேசு சொல்லித்தரும் விண்ணப்பங்கள் எல்லாமே, அன்றாட வாழ்வுக்குத் தேவையானவை. எங்கள் அனுதின உணவைத் தாரும், மன்னிக்கும் மனதைத் தந்தருளும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும் என்ற விண்ணப்பங்களே, இச்செபத்தில் இடம்பெற்றுள்ளன.

செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். இல்லையா? கடவுளிடம் நீண்ட பட்டியல்களை அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத் திறந்து வைப்பது, உண்மைகளைச் சொல்வது ஆகியவை இன்னும் அழகான செபங்கள். இத்தகைய செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி ஒரு செபத்தைச் சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் குறையைச் சொன்னால் போதும்; என்று எண்ணுவதற்கு, நிறைவான நம்பிக்கை வேண்டும்.

மீண்டும் அந்த மளிகைக்கடை கற்பனைக்காட்சிக்குத் திரும்புவோம். மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்க, வீட்டுத்தலைவர் வந்திருக்கிறார். அவர் அங்கு வருவதற்கு முன்னால், வீட்டில் என்ன நடந்திருக்கும்? நம் கற்பனையில் கொஞ்சம் ‘பிளாஷ் பேக்’ (Flash Back) போவோம். வீட்டுத்தலைவர், கடைக்கு வருவதற்கு முன், ஒரு செய்தித்தாளைப் படித்தபடி, வீட்டில் அமர்ந்திருக்கிறார். வீட்டுத்தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டது என்பதை உணர்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? ‘தயவு செய்து, செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள்’ என்பதுதானே? அவர் சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி. தலைவன் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள் இவை. மரியாவும் இப்படி ஓர் உண்மையை இயேசுவுக்கு முன்னால் வைக்கிறார் - "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது."

திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்ற குறையை, திருமண வீட்டாரிடம் கூறாமல், அன்னை மரியா, ஏன் இயேசுவிடம் கூறவேண்டும்? என்று யாராவது கேள்வி எழுப்பினால், “இது என்ன குழந்தைத்தனமான கேள்வி? இயேசு புதுமைகள் செய்வார் என்று மரியாவுக்குத் தெரிந்திருக்கும். அதனால், அவரிடம் இதைச் சொல்கிறார்” என்று எளிதானதொரு பதிலைச் சொல்ல முற்படுகிறோம். ஆனால், இதுதான் இயேசு செய்த முதல் புதுமை என்று, யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, புதுமைகள் நிகழ்த்தும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு என்று மரியாவுக்கு ஏற்கெனவே தெரியுமா? என்ற கேள்வி எழுகிறது. இது, சிந்திக்கவேண்டிய கருத்து.

தன் மகன், மகள் இவர்களிடம் புதைந்திருக்கும், மறைந்திருக்கும் திறமைகளை அன்னையர் உணர்ந்திருப்பர். குழந்தைகள், தங்கள் திறமைகளை, அதுவரை வெளிப்படையாகக் காட்டவில்லையெனினும், அவர்களது திறமைகளை, ஒரு தாய், தன் உள்ளத்தில் உணர்ந்திருப்பார்.

தன் மகன் இறைவனின் மகன் என்பதையும், இறையருளால் நிறைந்தவர் என்பதையும் அன்னை மரியா ஆரம்பத்திலிருந்தே உணர்ந்திருந்தார். அவ்வாறெனில், அந்த ஆற்றலைப் பயன்படுத்தி, அவர்களது தினசரி வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்றிருக்கலாமே என்று எண்ணத்தோன்றுகிறது. அன்னை மரியா அப்படி செய்ததாகத் தெரியவில்லை. இயேசுவின் திறமைகளை, சக்திகளைப் பயன்படுத்தி, அன்னை மரியா தன் சுயநலன்களை தீர்த்துக்கொண்டிருந்தால், அவர், இயேசுவை ஒரு மந்திரவாதியாக மாற்றியிருப்பாரே தவிர, ஒர் இறைமகனாக வளர்த்திருக்க முடியாது.

புதுமைகள் செய்யக்கூடிய ஆற்றலை இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட ஓர் உண்மை இறையடியாரைப் பற்றிய சிறுகதையை சென்ற ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொண்டோம். இதோ, மீண்டும் ஒருமுறை அந்த அழகிய கதையை நினைவுகூர்வோம்:

மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதையே தன் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஓர் இறையடியாருக்கு முன் இறைவன் தோன்றினார். அந்த மகானின் அற்புத வாழ்வுக்குப் பரிசாக அவருக்கு பிடித்த ஒரு வரத்தை கேட்கச் சொன்னார், இறைவன். “இறைவா, நாள் முழுவதும் உம்மைத் தியானிக்கும் அந்த ஒரு வரம் எனக்குப் போதும், வேறு வரம் எதுவும் வேண்டாம்” என்று கூறும் இறையடியாரிடம், ஏதாவது ஒரு வரம் கேட்கும்படி, கடவுள் கட்டாயப்படுத்துகிறார். இறுதியாக, அந்த மகான், "இறைவா, என் நிழலைத் தொடும் அனைவரும் குணம் பெறும்படி வரம் தாரும்" என்று கேட்டார். இறைவன் அந்த வரத்தை மகிழ்வோடு தருவதாகச் சொன்னார். உடனே மகான் ஒரு நிபந்தனையைச் சொன்னார்... "எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலுக்கு மட்டுமே இந்தச் சக்தியை நீர் தரவேண்டும்" என்று அந்த மகான் வேண்டிக்கொண்டார்.

மக்களுக்கு நன்மைகள் நிகழவேண்டும், ஆனால், அது தனக்குத் தெரியாமல் நிகழவேண்டும் என்பதில் அந்த இறையடியார் மிகத் தெளிவாக இருந்தார். தன்னலத்தை அறவே துறந்த இறையடியார்களின் ஒட்டுமொத்த உருவாக, அவர்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாக மரியா வாழ்ந்தார் என்பதற்கு, கானா திருமண நிகழ்வு, மற்றுமோர் அழகியச் சான்று. அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி தன் மகனிடம் இருப்பதை, அன்னை மரியா உணர்ந்திருந்தாலும், அந்த சக்தி மற்றவருக்கு மட்டும் பயன்பட வேண்டுமேயொழிய, தன் நலனுக்காக அல்ல என்பதில், அன்னை மரியா, தெளிவாக, தீர்க்கமாக இருந்தார். மரியாவின் இந்த வேண்டுகோளுக்கு, இயேசு அளித்த பதில், நம் அடுத்தத் தேடலை வழிநடத்தும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

06/02/2018 14:43