2018-02-07 15:21:00

கந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக செபம்


பிப்.07,2018. இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில் கந்தமால் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை அருளாளர்களாக அல்லது புனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகள் விரைவில் நிகழவேண்டும் என்ற கோரிக்கையை இறைமக்கள் எழுப்பும் வண்ணம், செபம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்து அடிப்படை வாதிகளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்காக, கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தில், உருவாக்கப்பட்டுள்ள உயர் மட்டக் குழுவினர், இந்த செபத்தை, அம்மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளுக்கும் கத்தோலிக்க நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

ஆங்கிலத்திலும், ஒடியா மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செபத்தின் பயனாக, கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள், மறைசாட்சிய புனிதர்களாக அறிவிக்கப்பட்டால், அது, ஒடிஸ்ஸா மக்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியத் திருஅவைக்கே ஒரு பெரும் உந்து சக்தியாக அமையும் என்று, ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இந்து அடிப்படைவாதிகள், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில், நான்கு மாதங்களாக நடத்திய வன்முறைகளில், ஏறத்தாழ 100 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், 300 ஆலயங்கள் மற்றும் 6000த்திற்கும் அதிகமான இல்லங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன என்று, UCA செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.