2018-02-07 15:14:00

தைவான் நிலநடுக்கம் - பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை தந்தி


பிப்.07,2018. "நாம் ஆன்மீக வாழ்வில் வளரும்போது, அருள் எவ்விதம் நம்மையும், மற்றவர்களையும் வந்தடைகிறது என்பதையும், அதை அனைவரோடும் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதையும் உணர்கிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக பிப்ரவரி 7, இப்புதனன்று வெளியாயின.

மேலும், தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹுவாலியென் (Hwalien) மறைமாவட்ட ஆயர், பிலிப் ஹுவாங் சாவோ-மிங் (Philip Huang Chao-ming) அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

இந்த இயற்கைப் பேரிடர் வேளையில், பணியாற்றிவருவோருக்கும், தைவான் மக்கள் அனைவருக்கும் தன் அன்பையும், செபத்தையும், இத்தந்தி வழியே, திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 6, இச்செவ்வாய் நள்ளிரவு நெருங்கிய வேளையில் ஹுவாலியென் நகரைத் தாக்கிய, 6.4 ரிக்டர் அளவு நில நடுக்கத்தால், 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், 250க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.