2018-02-07 15:27:00

மறைக்கல்வியுரை : இறைவார்த்தையை இதயத்தில் குடியமர்த்தல்


பிப்.07,2018. இப்புதனன்று விடியற்காலையில் பெய்த மழை மீண்டும் வரலாம் என்ற அச்சத்தாலும், குளிர் காற்று வீசிக்கொண்டிருந்ததாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்புதன் மறைக்கல்வியுரை, அருளாளர், திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. திருப்பலி குறித்த தொடர் மறைக்கல்வி உரையில் இப்புதனன்று, முதலில் மாற்கு நற்செய்தி 2ம் பிரிவின் துவக்க இரு வாக்கியங்களான, 'சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்' என்பது வாசிக்கப்பட, திருப்பலியின் இறைவாக்கு வழிபாட்டு பகுதி குறித்து தன் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை.

அன்பு சகோதர சகோதரிகளே, திருநற்கருணை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில், இப்போது, நற்செய்தி வாசகத்திலும், மறையுரையிலும் தன் உச்சத்தை எட்டும் இறைவார்த்தை வழிபாடு குறித்து நோக்குவோம். முதலில் வாசிக்கப்படும் விவிலிய வாசகங்களில் இயேசுவின் மறையுண்மை ஒளியை வீசுகிறது, நற்செய்தி வாசகம். நமது ஏற்பு பதிலுரைகளாலும், இறைவார்த்தை அறிவிப்பையொட்டிய சடங்கு முறைகளாலும் நாம், நற்செய்தியை, இறைவனின் மீட்பளிக்கும், உயிருள்ள வார்த்தையாக வணங்குகிறோம், திருப்பலியில் கூடியிருக்கும் மக்களிடையே இறைவார்த்தை வழிபாட்டில் பேசும் இறைவன், நம் பதிலுரைக்காகக் காத்திருக்கிறார். இறைவனுக்கும், அவர் மக்களுக்கும் இடையேயான இந்த உரையாடல், மறையுரையிலும் தொடர்கிறது. மனுவுருவான இறைவார்த்தையை நம் இதயங்களிலும் வாழ்விலும் குடியமர்த்த மறையுரை முயல்கின்றது.  திருப்பலியில் நாம் கொண்டாடும் கிறிஸ்துவுடனான ஒன்றிப்பு, மறையுண்மைக்குள் மேலும் ஆழமாக நம்மை இட்டுச் செல்கிறது மறையுரை. மறையுரையாளரிடமும் திருப்பலியில் குழுமியிருக்கும் விசுவாசிகளிடமும், சில எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறது மறையுரை. மறையுரையின் வழியாக விடப்படும் மனமாற்றத்திகான அழைப்பு, சிலவேளைகளில் சவால் நிறைந்ததாகவும், வேதனையளிப்பதாகவும் இருப்பினும், நம் வாழ்வில் இறைவார்த்தைகளை எவ்விதம்   ஈடுபடுத்திக் கொள்வது என்பது குறித்து ஆழ்ந்து ஆராய மனம் திறந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். தனிப்பட்ட முறையில் நற்செய்தி நூலை வாசித்து, அது குறித்து தியானித்து, நற்செய்தியோடு மேலும் நெருக்கத்தை உருவாக்கி வாழும்போது, ஞாயிறு திருப்பலி வாசகங்களின் அழகையும், அவைகளின் செழுமையையும் மேலும் சிறப்பாக உணர்ந்து பாராட்ட நம்மால் இயலும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு விண்ணப்பங்களையும் முன்வைத்தார்.

புனித ஜோசஃபின் பகிதாவின் திருவிழாவைச் சிறப்பிக்கும் இவ்வியாழனன்று, வியாபாரப் பொருட்களாக மனிதர்கள் கடத்தப்படுவதை எதிர்த்து ஆழ்ந்து சிந்திக்கவும் செபிக்கவும் அழைப்பு விடுக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது, என்பதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிபெயர்வதற்கான வழிகள் மறுக்கப்படும்போது, வேறு வழிகள் தேடப்படுவதால், சுரண்டல்கள், உரிமை மீறல்கள் மற்றும் அடிமைத்தனம் வளர வாய்ப்பாகின்றது என்பதை சுட்டிக்காட்டி, மக்களை சட்டவிரோதமாக நாடுவிட்டு நாடு கடத்துவோரின் மனங்கள் மாறவேண்டும், மற்றும், இதனால் துன்புறுவோர் விடுதலை பெற வேண்டும் என உழைப்போருடன் நம் சக்திகளையும் ஒன்றிணைப்போம் என கேட்டுக்கொண்டார்.

இவ்வெள்ளியன்று, தென் கொரியாவின் PyeongChang நகரில் துவங்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு, தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை. ஒரே கொடியின் கீழ் இரு கொரிய நாடுகளும் இந்த விளையாட்டில் பங்கு கொள்வது அமைதியின் அடையாளமாக உள்ளது எனவும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள், நட்புணர்வு மற்றும் விளையாட்டுகளின் மிகப்பெரும் கொண்டாட்டங்களாக அமையட்டும் எனவும் வாழ்த்தினார்.

இதன்பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.