2018-02-08 15:11:00

திருத்தந்தையின் மறையுரை: பாவிகள் புனிதர்களாக மாறமுடியும்


பிப்.08,2018. பாவிகள் புனிதர்களாக மாறமுடியும், ஆனால், வேண்டுமென்றே தவறான வழியில் செல்வோர் புனிதராக முடியாது என்ற எச்சரிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவீது, சாலமோன் என்ற இருவரையும் ஒப்புமைப்படுத்தி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

சாலமோனின் உள்ளம் அவரது தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல், ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது உள்ளங்கள், இறைவனைவிட்டு விலகி, வலுவற்று போகும்போது, அது ஆபத்தில் முடிகிறது என்று கூறினார்.

தான் தவறு செய்துள்ளோம் என்பதை தாவீது உணர்ந்தபோதெல்லாம், அவர் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு திரும்பி வந்தார், ஆனால், சாலமோனோ, உலகப் புகழ்பெற்ற அறிவுத்திறனைப் பெற்றிருந்தும், தவறான வழியில் செல்வதை புரிந்துகொள்ள விழையாமல், பொய் தெய்வங்களை நாடிச் சென்றார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாளும், நம் உள்ளத்தில் நிகழ்வனவற்றை விழிப்புடன் கண்காணிப்பது அவசியம் என்றும், விழிப்புடன் வாழும் உள்ளமே, மகிழ்வுடன் வாழ முடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.