2018-02-09 15:21:00

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதன்முறையாக திருப்பீடம்


பிப்.09,2018. தென் கொரியாவின் PyeongChangல், பிப்ரவரி 09, இவ்வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்துள்ள, 23வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் தொடக்க நிகழ்வில், திருப்பீட பிரதிநிதிகள் குழு ஒன்று, பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளது.

உலகளாவிய ஒலிம்பிக் குழு, ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பார்வையிடுவதற்கு, திருப்பீடத்திற்கு, முதன்முறையாக அழைப்பு விடுத்ததன்பேரில், திருப்பீட கலாச்சார அவையின் நேரடி பொதுச் செயலர் பேரருள்திரு Melchor Sanchez de Toca அவர்கள் தலைமையிலான குழு, பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளது.

இவ்வெள்ளியன்று நிகழ்ந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டுள்ள திருப்பீட பிரதிநிதிகள் குழு, பிப்ரவரி 5ம் தேதி முதல், 7ம் தேதி வரை நடைபெற்ற, ஒலிம்பிக் விளையாட்டு சார்ந்த கூட்டம் ஒன்றிலும் பார்வையாளராகப் பங்கேற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட கொரிய கம்யுனிச நாட்டின் கிம் குடும்ப உறுப்பினர் ஒருவர், முதன்முறையாக, 23வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பார்வையிடுவதற்கு, தென் கொரியத் தலைநகர் சோல் வந்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

வட கொரியத் தலைவர் Kim Jong-un அவர்களின் இளைய சகோதரி Kim Yo-jong அவர்கள், வட கொரியப் பிரதிநிதிகள் குழுவுடன் சோல் வந்துள்ளார் என்றும், இவர், 1953ம் ஆண்டுக்குப்பின், தென் கொரிய எல்லையில் நுழைந்துள்ள மிக முக்கியமான நபர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

22 விளையாட்டு வீரர்கள், 140 கலைக்குழுவினர், 229 விளையாட்டுகளை உற்சாகப்படுத்தும் தலைவர்கள், இன்னும் பலரையும் வட கொரியா, தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ளது.

23வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பிப்ரவரி 25ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.