2018-02-09 15:19:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவைக்காகச் செபித்து வருகிறார்


பிப்.09,2018. 91 வயது நிரம்பிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஆழ்ந்த ஆன்மீகத்தில் வாழ்ந்து வருகிறார் என்றும், திருத்தந்தைக்கும், திருஅவைக்குமென செபித்து வருகிறார் என்றும், முதிர்ந்த வயதின் உடல்நிலையால் எதிர்கொள்ளும்  துன்பங்களையும், திருத்தந்தைக்கும், திருஅவைக்குமென அர்ப்பணித்து வருகிறார் என்றும், பேரருள்திரு Alfred Xuereb அவர்கள் கூறினார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த ஐந்தாம் ஆண்டு, பிப்ரவரி 11, வருகிற ஞாயிறன்று நிறைவடைவதை முன்னிட்டு, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு பகிர்ந்துகொண்டார் பேரருள்திரு Xuereb.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமைப்பணிக் காலம் முழுவதும் இரண்டாவது செயலராகப் பணியாற்றிய பேரருள்திரு Xuereb அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது தலைமைப்பணியிலிருந்து ஓய்வுபெறப்போவது குறித்த தீர்மானத்தை, 2013ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தன்னிடம் அறிவித்தபோது, திருத்தந்தை மிகவும் அமைதியாகக் காணப்பட்டார் என்று தெரிவித்தார்.

அதை 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று பொதுவில் அறிவித்தபோதும், திருத்தந்தை மிகவும் அமைதியாகக் காணப்பட்டார் என்றும், அதற்கு முந்தைய நாள்களில், சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றச் செல்வதற்கு முன்னர், திருப்பலிக்கான நேரத்தையும் மறந்து, மிக நீண்ட நேரம் செபத்தில் ஆழ்ந்திருந்தார் என்றும் கூறினார், பேரருள்திரு Xuereb.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், ஓர் உடன்பிறப்பு உணர்வுடன் வாழ்ந்து வருகிறார் என்றும் கூறிய பேரருள்திரு Xuereb அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஆண்டவரைச் சந்திப்பதற்குத் தன்னைத் தயாரித்து வருகிறார் என்றும் பகிர்ந்துகொண்டார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.