2018-02-09 15:02:00

திருத்தந்தை : நவீன அடிமைமுறைகளின் அவலங்கள்


பிப்.09,2018. நவீன அடிமைமுறைகள், ஏற்கனவே நாம் நினைத்ததைவிட, மிகவும் அதிகரித்து வருகின்றன என்றும், மிகவும் செழிப்பான நம் சமூகங்களிலும் இவை பரவியுள்ளன என்பது, துர்மாதிரிகையாகவும், வெட்கத்துக்குரியதாகவும் உள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, ஒரு பன்னாட்டு குழுவிடம் கூறினார்.

மனித வர்த்தகம் மற்றும் நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்காக இயங்கும் உலகளாவிய “சாந்தா மார்த்தா” குழுவின் ஏறத்தாழ நூறு உறுப்பினர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தொழில்நுட்பம், சமூகத் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றோடு தொடர்புடைய விவகாரங்களைக் கவனத்தில் கொண்டதாய் அமைய வேண்டும் எனவும் கூறினார்.

சாந்தா மார்த்தா குழு, இந்நாள்களில், வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில், மனித வர்த்தகம் மற்றும் நவீன அடிமைமுறையை ஒழிப்பது குறித்த, உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடியது, பெரிதும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உன் சகோதரன் எங்கே? என்று, கடவுள் காயினிடம் கேட்ட விவிலிய வசனம் முன்வைக்கும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குழுவின் முயற்சிகளுக்குத் தன் பாராட்டையும் தெரிவித்தார்.

மனித வர்த்தகம் மற்றும் நவீன அடிமைமுறையை ஒழிக்கும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டில் சாந்தா மார்த்தா குழுவை உருவாக்கி, அதன் தலைவராக, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களை நியமித்தார். இக்குழு, தற்போது, 35 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

வத்திக்கானில், இவ்வியாழன், இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில், சாந்தா மார்த்தா குழு நடத்திய கூட்டத்தில், ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா, பசிபிக் பகுதி, வட மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளின் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின், கத்தோலிக்கச் தலைவர்கள் மற்றும், சட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.