2018-02-09 14:47:00

திருத்தந்தை பிரான்சிஸ், எஸ்டோனியா பிரதமர் Ratas சந்திப்பு


பிப்.09,2018. எஸ்டோனியா குடியரசின் பிரதமர் Jüri Ratas அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பிற்குப்பின், தான் அழைத்துச் சென்றிருந்த குழுவினரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்த, எஸ்டோனியா பிரதமர் Ratas அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால், பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத் துறையின் நேரடி பொதுச் செயலர், பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்து உரையாடினார். 

திருப்பீடத்திற்கும் எஸ்டோனியா நாட்டிற்கும் இடையே நிலவும் அரசியல் நல்லுறவுகள், தலத்திருஅவை அந்நாட்டிற்கு ஆற்றிவரும் நற்பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோர், போர் இடம்பெறும் இடங்களில் தீர்வு காண்பதற்கு உலகளாவிய சமுதாயத்தின் அர்ப்பணம் போன்ற தலைப்புகள், இச்சந்திப்புகளில் இடம்பெற்றன என்று, திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

வட ஐரோப்பாவில், பால்டிக் நாடுகளில் ஒன்றாக விளங்கும் எஸ்டோனியா, 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி, முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.

மேலும், வாழ்வு மற்றும் மனித மாண்புக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர், கார்லோ கசினி அவர்களும், இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இன்னும், “இறைவன் தங்கள் வழியாக ஆற்றியுள்ள செயல்களை உயிரூட்டத்துடன் நினைவில் வைத்திருப்பதற்கு, கிறிஸ்தவர்கள் அழைப்பு பெற்றுள்ளனர்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.