2018-02-09 15:08:00

நவீன அடிமை முறையை ஒன்றுசேர்ந்து ஒழிப்பதற்கு அழைப்பு


பிப்.09,2018. புறக்கணிப்பு கலாச்சாரத்தின் உற்பத்திப் பொருள்களாக, மனித வர்த்தகத்திற்கும், நவீன அடிமைமுறைக்கும் பலியாகும் நலிந்தோரை நாம் பராமரிக்குமாறு ஆண்டவர் நம்மிடம் கேட்கின்றார் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

உலகளாவிய சாந்தா மார்த்தா குழுவினருக்கு, இவ்வியாழனன்று வத்திக்கான்  தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் பெண்களும் சிறுமிகளும் என்றும், இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், சிறார் என்றும் கவலை தெரிவித்தார்.

நாம் தனியாக கனவு கண்டால், அது ஒரு கனவாகவே இருக்கும், ஒன்றுசேர்ந்து கனவு கண்டால், அது ஏதோ ஒன்றைப் புதிதாகத் தொடங்குவதாக இருக்கும் என்ற, ஆப்ரிக்க  பழமொழிக்கேற்ப, நாம் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், நவீன அடிமைமுறைகளை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், மனித வர்த்தகம் மற்றும் நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்காக இயங்கும் உலகளாவிய “சாந்தா மார்த்தா” குழு பற்றி, இவ்வெள்ளியன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார், இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்.

மியான்மாரின் யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ, நைஜீரியாவின் அபுஜா பேராயர், கர்தினால், John Olorunfemi Onaiyekan, இலண்டன் காவல்துறை அதிகாரி Cressida Dick, அர்ஜென்டீனா காவல்துறை அதிகாரி Nestor Roncaglia, நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கு, உலக அளவில் நிதி திரட்டும் அமைப்பின் Jean Baderschneider ஆகியோரும் இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.