சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

இறையன்புத் தீயை கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எடுத்துச்செல்லுங்கள்

திருக்காயங்கள் துறவு சபையின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

10/02/2018 15:18

பிப்.10,2018. ஒரு துறவற குழுமத்தில், சகோதரத்துவ அன்பு நிலவும்போது, அங்கே வெப்பமும், ஒளியும், முன்னோக்கிச் செல்வதற்குரிய சக்தியும் இருக்கும், அதேநேரம், புதிய இறையழைத்தல்கள், நற்செய்தி அறிவிப்பு எனும் இனிமையான பணிக்கு ஈர்க்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு துறவு சபையினரிடம் கூறினார்.

இயேசு கிறிஸ்துவின் திருக்காயங்கள் துறவு சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ நாற்பது பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை முற்பகலில் திருப்பீடத்தில் சந்தித்து, தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, ஒரு துறவற குழுமத்தில், இயேசு எனும் நல்ல நெருப்பு இல்லாதபோது, அங்கே புறக்கணிப்பும், தனிமையும், இருளும் இருக்கும் என்றும் எச்சரித்தார்.

விண்ணகப் போதகரைப் பின்பற்றி, உலகில் தீ மூட்டவே நீங்கள் அழைப்புப் பெற்றுள்ளீர்கள் என்று, அத்துறவு சபை பிரதிநிதிகளிடம் கூறியத் திருத்தந்தை, தீயில் இருவகை உள்ளது, இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியரின் ஊரை, வானத்திலிருந்து தீ வந்து அழிக்குமாறு செய்யவா? என, சீடர்கள் யாக்கோபும் யோவானும் கேட்டது மோசமான தீ என்று கூறினார்.

விவிலியத்தில் கடவுள் விரும்பும் தீ, அன்பின் தீ என்றும், இது, வன்முறையால் அல்ல, மாறாக, ஒவ்வொரு மனிதரின் சுதந்திரத்தையும், நேரத்தையும் மதிக்கும், மக்களின் மனங்களைக் கவரும் தீ என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்தவச் சமூகங்களில், இந்த அன்பின் தீயைப் பற்ற வைக்க வேண்டும் என்றும், ஏழைகள், எவராலும் அன்புசெலுத்தப்படாதவர்கள், சோகத்திலும், தனிமையிலும் வாழ்வோர், கைதிகள், வீடற்றவர், போர்களுக்கு அஞ்சி புலம்பெயரும் வீடற்றோர் ஆகியோர்க்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்றும், திருக்காயங்கள் சபையினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை அறிவிப்பவர் எவரும் பிறரால் கவர்ந்திழுக்கப்படுவர் என்றும், அவர்கள், பொறுமை மற்றும் உறுதியுடன் இயேசுவிடம் பிறரை அழைத்துச் செல்வர் எனவும் கூறியத் திருத்தந்தை, மகிழ்வும், கனிவும் நிறைந்த மறைப்பணியாளர்களாக இருங்கள், ஒவ்வொருவரையும் சந்திப்பதற்கு நன்கு தயார் செய்துகொள்ளுங்கள் என்றும் கூறினார்.   

இயேசு கிறிஸ்துவின் திருக்காயங்கள் துறவு சபை, இத்தாலியின் வெரோனாவில் புனித Gaspar Louis Bertoni அவர்களால், 1816ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இச்சபை, 2002ம் ஆண்டில், இந்தியாவில் பணியைத் தொடங்கியது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/02/2018 15:18