சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

இலாபங்களைவிட மனிதருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

இத்தாலிய அஞ்சல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சந்திப்பு

10/02/2018 15:28

பிப்.10,2018. ஏறத்தாழ நானூறு, இத்தாலிய அஞ்சல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை, இச்சனிக்கிழமை நண்பகலில் திருப்பீடத்தில் சந்தித்து, உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாளும் தங்களிடம் வருகின்ற பொது மக்களிடம், இரக்க மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

ஓர் அலுவலகத்தில் அல்லது பணம் செலுத்தும் இடத்தில் பணியாற்றுகின்றவர்கள், தங்களிடம் வருகின்ற பொது மக்களிடம் கோபத்துடன் நடந்துகொள்ளாதவர்களாக, அதேவேளை, பொது மக்களும், பணியாளர்களை எரிச்சலூட்டாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒவ்வொரு நாளும் ஆற்றும் சிறு சிறு செயல்களிலும், எண்ணங்களிலும் இரக்கப்பண்பை வெளிப்படுத்த, தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தங்களை அணுகி வருபவரை எப்போதும் புன்னகையுடன் வரவேற்கும் பண்பிலும் வளருமாறு கூறினார்.

இத்தாலிய அஞ்சல்துறை, அந்நாட்டின் வாழ்வு மற்றும் வரலாற்றோடு தொடர்புடையது என்றும், மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கேற்ப தன்னைப் புதுப்பித்து வருகின்றது என்றும் பாராட்டிய திருத்தந்தை, இந்தப் புதுப்பித்தலில், ஆதாயங்களைவிட மனிதருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இத்தாலிய அஞ்சல்துறை, பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீது எப்போதும் சிறப்பான அக்கறை கொண்டு செயல்படும் வழிகளைத் தேடுகின்றது என்றும் திருத்தந்தை என்றும் கூறினார்.

குடிமக்களுக்குப் பணியாற்றுவதே முக்கிய நோக்கமாக அமைய வேண்டும் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, இத்துறையினருக்குத் தனது செபம் நிறைந்த ஆசீரை வழங்கியதோடு, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/02/2018 15:28