2018-02-10 15:41:00

ஒடிசாவிலுள்ள ஏழு கிறிஸ்தவ கைதிகளின் விடுதலைக்காக செபம்


பிப்.10,2018. ஒடிசா மாநிலத்தில், இந்துமத குரு ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது ஆண்டுகளாக சிறையிலுள்ள ஏழு குற்றமற்ற கிறிஸ்தவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, இந்திய ஆயர்கள் எல்லாரும் இணைந்து செபம் செய்துள்ளனர்.

இந்தியாவின் 174 மறைமாவட்டங்களின் ஆயர்கள் பெங்களூருவில் நடத்திய 33வது ஆண்டுக் கூட்டத்தில், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், இந்தச் செபத்தை வழிநடத்தியுள்ளார்.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, 81 வயது நிரம்பிய இந்துமதக் குரு சுவாமி லஷ்மானந்தா அவர்கள், தனது ஆசிரமத்தில், கொல்லப்பட்டதையடுத்து, கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை தொடங்கியது. ஆயினும், இக்கொலைக்கு முன்னதாகவே, கிறிஸ்தவர்க்கெதிராகச் சதித்திட்டம் உருவானது என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும், பெங்களூருவில் நடைபெற்ற 33வது ஆண்டுக் கூட்டத்தில், தலித் மக்களின் வாழ்வையும், சமூக நிலையையும் ஊக்குவிப்பதற்கு, இந்திய ஆயர்கள் தங்களின் அர்ப்பணத்தை மீண்டும் உறுதி செய்தனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில், தலித் மக்களின் வாழ்வை முன்னேற்றுவது மட்டுமல்லாமல், திருஅவையிலும், நாட்டிலும், அம்மக்கள் பாகுபடுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆயர்கள் தீர்மானித்தனர் என்று, இயேசு சபை அருள்பணி மரிய அருள் ராஜா அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides /UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.