சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ சமூக ஆய்வு

வாரம் ஓர் அலசல்–விடாமுயற்சி உள்ளவர்க்கு விழ விழத்தான் வேகம்

சிலே நாட்டில் சுரங்கத்திற்கடியில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் - EPA

12/02/2018 15:07

பிப்.12,2018. யுடியுப்பிலும், வாட்சப் பகிர்விலும் பார்த்து, இரசித்து, சிந்தித்த ஒரு காட்சியை, கற்பனையில் காண உங்களையும் அழைக்கிறோம். நீங்களும்கூட அக்காணொளியைப் பார்த்திருக்கலாம். இரண்டு மூன்று படிக்கட்டுகள் கொண்ட ஓரிடத்தில், தாய் வாத்து ஒன்று, மேலே நின்றுகொண்டிருக்கின்றது. அதனுடைய ஏறத்தாழ 12 குஞ்சுகள், கீழ்ப்படிக்கட்டுகளில் நின்றுகொண்டு தாயிடம் செல்வதற்கு முயற்சி செய்கின்றன. அவை, மிகவும் சிரமப்பட்டு போராடி, துள்ளித் துள்ளிக் குதித்து, அடுத்த படியைத் தொட்டும், விழுந்தும், தாயிடம் செல்ல முயற்சி செய்கின்றன. தாய் வாத்து மேலே நின்று, அங்குமிங்குமாக நடந்து தன் முகத்தைக் காட்டுகின்றது. தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே, தாய் செல்லும் திசையில் குஞ்சுகளும் ஓடி, படிக்கட்டுகளில் ஏற முயற்சி செய்கின்றன. விழுந்ததைப் பற்றிக் கவலைப்படாமல், விடாமல் முயற்சி செய்து, முதலில் ஒரு குஞ்சு அடுத்தடுத்த படிக்கட்டுக்களைத் தாண்டி தாயிடம் செல்கின்றது. அதைத் தொடர்ந்து, எல்லாக் குஞ்சுகளுமே, ஒவ்வொன்றாக, குதிப்பதும், கீழே விழுவதுமாக, விடாமல் முயற்சி செய்து தாயிடம் சென்று விடுகின்றன. பின்னர், தாய் வாத்து குஞ்சுகளைக் கூட்டிக்கொண்டு செல்கின்றது. நெல்லை, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் இசக்கி முத்தையா அவர்கள், இந்தக் காட்சி பற்றி, தன் சிந்தனைகளை இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தால், இமயம்கூட எள்ளுதான். தோல்வி என்பது தள்ளிப்போடப்பட்டிருக்கும் வெற்றிதான். விடாமுயற்சி உள்ளவர்க்கு விழ விழத்தான் வேகம் அதிகரிக்கும். தோல்வி என்பது ஒன்றைச் சிறப்பாக, இன்னும் சிறப்பாகச் செய்யக் கிடைக்கும் வாய்ப்புதான். எத்தனை தடவை கீழே விழுந்தீர்கள் என்பது கணக்கல்ல. எப்படியாவது மேலே வந்து விடுங்கள். அதுதான் உங்கள் இலக்கு. இருள் வந்தால்தான் நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பிக்கும். பிரச்சனைகள் வந்தால்தான் உங்கள் திறமையும் வெளிப்படும். வெற்றியாளராக இருக்க வேண்டும் அல்லது வெற்றியாளரோடு இருக்க வேண்டும். எப்போதும் சாதனையாளர்களோடு இருங்கள். நீங்கள் சாதிக்கப் பிறந்திருக்கின்றீர்கள்...

நெல்லை இசக்கி முத்தையா அவர்கள் இவ்வாறு, அந்தக் காணொளியில் பேசியுள்ளார். நாம் கற்பனையில் பார்த்த அந்தக் காணொளிக் காட்சியில், வெற்றியாளர், தாய் வாத்து. வெற்றியை வேட்டையாடுகிறவர்கள் அந்த வாத்துக் குஞ்சுகள். இந்தக் குஞ்சுகள் விடாமல் முயற்சி செய்தபோது, பலமுறை கீழே விழுந்தன. அப்படி கீழே விழுந்து எழுந்து முயற்சித்த போது, அவற்றின் வேகமும் அதிகரித்தது. ஒவ்வொரு முறையும் சோர்ந்துபோகாமல் விடாமல் முயற்சி செய்து வெற்றிப்படியையும் அவை எட்டின.

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், சரவண மணிகண்டன். அவர், தன்னுடைய நண்பர்கள் ஐந்து பேருடன் இணைந்து, கடந்த சனவரி மாதம் 27ம் தேதி 'விரல்மொழியர்' என்ற ப்ரெய்லி மின்னிதழைத் தொடங்கியிருக்கிறார். இது, பார்வைக் குறையுடையோருக்காக, பார்வைக் குறையுடையோரால் நடத்தப்படும் முதல் இணையதளமாகும். இந்த மின்னிதழ், தலையங்கம், கவிதை, பிற இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் பற்றிய விமர்சனம், பார்வைக் குறையுடையோருக்காக வர்த்தக உலகில் வரும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற ஏராளமான உள்ளடக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆசிரியர் சரவண மணிகண்டன் அவர்கள், விகடன் இதழில் இவ்வாறு விவரித்துள்ளார்.

"பாடப் புத்தகங்கள் மட்டுமே ப்ரெய்லி வடிவில் கிடைக்கும் காலகட்டம் இருந்தது. அப்போது, பார்வைக்குறையுடைய ஒருவர் தினசரிகள், வார, மாத இதழ்களை வாசிப்பதெல்லாம் பார்வையுள்ள ஒருவரின் உதவியின்றி நடைபெறாது. ஆனால், கணினி மற்றும் தொடுதிரை செல்பேசிகள் வரவுக்குப் பிறகு, பார்வைக்குறையுடைய நாங்களும், பார்வையுள்ளவர்களுக்கு இணையாகப் பல்வேறு இணையதளங்களில் பல்வேறு விதமான தகவல்களைப் படிக்க முடிகிறது. இதைச் சாத்தியமாக்கியவை ஜாஸ் (JAWS) மற்றும் என்.வி.டி.ஏ. (NVDA) போன்ற திரைவாசிப்பான்கள் (Screen-Readers). இந்தத் திரைவாசிப்பான்கள், ஒருங்குறி (Unicode) எழுத்துகளை மட்டுமே படிக்கும். பெரும்பாலான தினசரி, வார, மாத இதழ்களுக்கான வலைதளங்கள், ஒருங்குறி வடிவில் (Unicode) வடிவமைக்கப்பட்டிருந்தாலும், சந்தா செலுத்திப் படிக்கப்படும் மின்-தினசரிகள் (E-Paper), மின்-வார இதழ்கள் (E-Magazines), படங்கள் (image) உள்ளிட்டவை, பி.டி.எஃப் (PDF) வடிவிலேயே இருப்பதால், எங்களால் சமகால எழுத்துகளை உடனுக்குடன் படிப்பது இயலவில்லை. தி இந்து குழுமமும், விகடனும், எங்களின் இத்தகைய கையறுநிலையைப் போக்கி, தங்களது இதழ்களை ஒருங்குறி முறையில் வடிவமைத்து, எங்களின் பரந்த வாசிப்புக்குத் துணை நிற்கின்றன. இத்தகைய தொடர்வாசிப்பினால் உந்துதல் ஏற்பட்டு, வெறும் படிப்பவர்களாய் இருந்த நாங்கள், சமூகவலைத்தளங்களில் கணக்குத் தொடங்கி எழுதி வருகிறோம். அப்படி பல்வேறு தளங்களில் இயங்கிவரும் ஆறு பார்வையற்ற இளைஞர்கள் ஒருங்கிணைந்து, எங்களைப்பற்றி இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டிய சில நுட்பமான விடயங்களை இந்த உலகுக்கு உரைக்க, உரையாட, ‘விரல்மொழியர்’ மின்னிதழ் இணையத்தைத் தொடங்கியிருக்கிறோம்.. எதையும் செய்ய வேண்டுமென்ற உத்வேகம், வீழ்வதைக் கண்டு பின்வாங்காமல், எழுந்து விடாமுயற்சியுடன் செயல்படுதல் போன்றவை சாதிக்க விரும்புவோருக்குச் சாதகமாகவே எப்போதும் இருந்து வருகின்றன.

Uddhab Bharali என்பவர், 140க்கும் மேற்பட்ட பொருட்களைக் கண்டுபிடித்துள்ளார். இவரின் சில கண்டுபிடிப்புகள் உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ளன. மேலும், வணிக ரீதியாகவும் அவை விற்பனை செய்யப்படுகின்றன. 56 வயது நிரம்பிய இவர், இந்தியாவின் அசாம் மாநிலத்தின் Lakhimpur மாவட்டத்தைச் சேர்ந்தவர். Jorhat பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடங்கிய இவரால், பல்வேறு பிரச்சனைகளால் படிப்பை முடிக்க இயலவில்லை. 1988ம் ஆண்டில் இவரின் குடும்பம், கடன் சுமையால் மிகவும் துன்புற்றது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, அந்த ஆண்டில் பாலிதீன் (polyethene) பொருள்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க விரும்பினார் இவர். இதற்கு கருவிகள் வாங்குவதற்கு, ஏறத்தாழ ஒரு இலட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது. இதனால் இவர், 67 ஆயிரம் ரூபாய்க்கு, தானே பாலிதீன் பொருள்களை வடிவமைத்தார். இப்படியாக இவரின் கண்டுபிடிப்புகள் வளர்ந்தன. தற்போது, Uddhab Bharali அவர்களுக்கு கண்டுபிடிப்புகளே வாழ்வின் பேரார்வமாகிவிட்டன. பராலி அவர்களின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் மிகக் குறைந்த செலவு கொண்டவை என்பதோடு, உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை. ஏற்கனவே விவசாயத் துறைக்கான கண்டுபிடிப்புகளுக்காக இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவர் பராலி. தற்போது அவரது புதிய கண்டுபிடிப்புகள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுகின்றன. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட, பதினைந்து வயதான மாற்றுத்திறனாளி ராஜ் ரஹ்மான் என்பவருக்கு, எளிய பொருட்களான Velcro, கரண்டி போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கருவியை, அவரின் கையின் முன்பகுதியில் பொருத்தியிருக்கிறார் பராலி. இதனால் எழுதுவதும், சாப்பிடுவதும் ராஜூவுக்கு எளிதாகிவிட்டன. ராஜ் வசதியாக நடப்பதற்காக, காலணி ஒன்றையும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் பராலி. இது குறித்து சொல்லும் ராஜ் ரஹ்மான், நான், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறேன். பள்ளிக்குச் செல்ல ரயில்வே கிராசிங்கை கடப்பது பற்றி கவலையில்லை. சிரமமின்றி சுலபமாக நடக்கிறேன். என்னை நானே கவனித்துக் கொள்ள முடியும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று. சிக்கலான இயந்திரங்களை உருவாக்கியுள்ள பராலி அவர்கள், தேங்காய் உடைக்கும் இயந்திரம், அரிசி அரைக்கும் இயந்திரம் போன்ற சிறிய, எளிய சாதனங்களையும் கண்டுபிடித்திருக்கிறார். ஆரம்பத்தில், மக்கள் தன்னை "தகுதியற்றவர்" என்று நினைத்ததாகச் சொல்லும் பராலி அவர்கள், "தன்னை ஒரு தரமான கண்டுபிடிப்பாளராக" நிரூபிக்க பதினெட்டு ஆண்டுகள் ஆனது என்றும், மக்களுக்கு உதவவேண்டும் என்பதே, தனது முதன்மையான நோக்கம் என்றும் சொல்கிறார். பிறரும் பணம் சம்பாதித்து, தங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்வதற்காக உதவுவதிலும் ஆர்வமாக இருக்கின்றார் பராலி. இவர் உருவாக்கியுள்ள சில மையங்களில், பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தனது இயந்திரங்களையும் வைத்திருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன. கண்டுபிடிப்பு என்பது, ஒவ்வொரு மனிதரின் உள்ளே இருந்து வருவது, யாரும் உங்களை ஒரு கண்டுபிடிப்பாளராக்க முடியாது. நீங்களாகவே அதை உணர வேண்டும்" என்று பராலி அவர்கள் கூறுகிறார்

அந்த வாத்துக் குஞ்சுகள் போல, வெற்றியை மட்டுமே கூர்மைப்படுத்தி, எந்த ஒரு செயலிலும், விடாமல் செயல்பட்டால், அடுத்தடுத்த வெற்றிப்படிகள் நிச்சயம் கிடைக்கும். விடா முயற்சி உள்ளவர்க்கு விழ விழத்தான் வேகம் அதிகரிக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

12/02/2018 15:07