2018-02-12 16:05:00

ஐ.நா. : ஈராக்கில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது வருங்கால சமூகமே


பிப்.12,2018. போரால் பாதிக்கப்பட்ட ஈராக் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த அனைத்துலக கருத்தரங்கு குவைத் நாட்டில் இடம்பெற்று வரும் வேளையில், அந்நாட்டின் குழந்தைகள் நிலை குறித்த அறிக்கையை அங்கு சமர்ப்பித்துள்ளன, ஐ.நா. நிறுவனத்தின் இரு அமைப்புக்கள்.

இத்திங்கள் முதல் புதன் வரை இடம்பெறும் இந்தக் கருத்தரங்கில், 'மாற்றத்திற்கான அர்ப்பணம்,வருங்கால பாதுகாப்பு உறுதி' என்ற தலைப்பில் அறிக்கையை சமர்ப்பித்துள்ள ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு, மற்றும், நகர குடியிடிருப்பு வளர்ச்சித்திட்ட நிறுவனமான ஹபிதாத் அமைப்பு, ஈராக்கில் 25 விழுக்காடு குழந்தைகள் ஏழ்மையில் வாடுவதாகத் தெரிவித்துள்ளன.

2014ம் ஆண்டு முதல், கல்வி நிறுவனங்கள் மீது 150 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அது தவிர, நல மையங்கள் மற்றும் நலப்பணியாளர்கள் மீது 50 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் மோசூல் நகரில் மட்டும் 21,400 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பள்ளிகளுள் பாதிப் பள்ளிகளுக்கு பாராமரிப்புப் பணிகள் தேவைப்படுவதாகவும் கூறும் இவ்வறிக்கை, 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பு இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஈராக் குழந்தைகளுள் 30 விழுக்காட்டினர் தங்கள் ஆரம்பக் கல்வியையே நிறைவுச் செய்யவில்லை எனவும் தெரிவிக்கிறது.

ஈராக் நாட்டில் 2260 சிறார்கள் இன்னும் சிறைவைக்கப்பட்டிருப்பதாவும், இதில் பாதிபேர் சிறார் இராணுவ வீரர்களாக பணிபுரிந்தவர்கள் எனவும் கூறும் ஐ.நா.வின் அறிக்கை, மோசூல் நகரின் 90 விழுக்காட்டு குழந்தைகள், தங்கள் அண்மை வீட்டாரின் மரணங்களைக் கண்டு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மேலும் கவலையை வெளியிடுகின்றது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.