சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

இமயமாகும் இளமை – கடைச் சரக்காக மாறிவிட்ட காதல் திருநாள்

வாலன்டைன் விழாவையொட்டி, லெபனான் நாட்டில் அலங்கரிக்கப்பட்ட கடைவீதி - REUTERS

13/02/2018 14:17

இளையோரை மையப்படுத்திய ஒரு விழா, பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் வாலன்டைன் (Valentine) விழா. இந்த விழாவின் மையம் ஓரமாகவும், ஓரங்கள் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதைப் புரிந்துகொள்ள, இந்த விழாவின் பின்னணியை நினைவுபடுத்திக் கொள்வது உதவியாக இருக்கும்.

உரோமைய கலாச்சாரத்தின் தேவர், தேவதைகளின் அரசியான ஜூனோவின் திருநாள், பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தத் திருநாளைத் தொடர்ந்து, லுப்பெர்காலியா (Lupercalia) என்ற திருநாளும் வரும். இந்த விழா நாட்களில், இளம்பெண்களின் பெயர்களைச் சீட்டுக் குலுக்கிப்போட்டு, இளைஞர்கள் தெரிவு செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள் என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர் காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.

மூன்றாம் நூற்றாண்டில், இரண்டாம் கிளவுதியுஸ் (Claudius) மன்னனாய் இருந்தபோது, போரில் ஈடுபடுவதற்கு, வீரர்களைச் சேர்ப்பது கடினமாய் இருந்தது. இளைஞர்கள், தங்கள் காதலைத் துறந்து, படைகளில் சேர விரும்பவில்லை. எனவே, மன்னன் கிளவுதியுஸ், பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்பட்ட திருநாளையும், அதைத் தொடரும் காதல், திருமணம் இவற்றையும் தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான்.

அந்நேரத்தில் உரோமையில் பணியாற்றி வந்த வாலன்டைன் என்ற இளம் கத்தோலிக்க அருள்பணியாளர், அரசனுக்குத் தெரியாமல், பல இளையோருக்கு திருமணங்கள் நடத்திவைத்தார். இதையறிந்த அரசன், அந்த அருள்பணியாளரைக் கைதுசெய்து, சிறையிலடைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். 270ம் ஆண்டளவில், பிப்ரவரி 14ம் தேதி, அருள்பணி வாலன்டைன் அவர்கள், தலை வெட்டப்பட்டு, உயிர் துறந்தார்.

வெறியை வளர்க்கும் போர்களில் ஈடுபட, இளையோர், முன்வரவில்லை என்று அரசன் கிளவுதியுஸ், காதலை, திருமணங்களை, தடை செய்தான். அன்பைத் தடுத்தால்தானே, வெறியை உருவாக்க முடியும். வெறியை வளர்க்க, அரசன் பயன்படுத்திய அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும் காதலையும் வளர்க்க, அருள்பணியாளர் வாலன்டைன் செய்தது, அழகான ஒரு முயற்சி.

வெறுப்பை வளர்த்த அரசன் கிளவுதியுஸூக்கு திருநாள் எதுவும் இல்லை. அன்பை வளர்த்த இளம் அருள்பணியாளர் வாலன்டைன் அவர்களின் திருநாள் பிப்ரவரி 14ம் தேதி, கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த அழகான, ஆழமான பின்னணியை மறக்கவைக்கும் அளவுக்கு, வாலன்டைன் நாள் என்பதற்கு, காதலர் தினம் என்ற வியாபாரப் பெயரைச் சூட்டி, வியாபார உலகம் செய்துவரும் விளம்பரங்களுக்கு, நம் இளையோர், அளவுக்கதிகமாக பலியாகி வருவது, கசப்பான உண்மை. பணம் இல்லையெனில், பரிசு இல்லையெனில், அன்போ, காதலோ இல்லை என்று எண்ணும் அளவுக்கு, இந்த அன்புத் திருநாள் பணக்காரத் திருநாளாகி விட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

13/02/2018 14:17