2018-02-13 15:21:00

இந்தியாவின் வருங்காலம் பற்றி இந்திய ஆயர்கள்


பிப்.13,2018. இந்தியாவில் கத்தோலிக்க விசுவாசம் பரவுவதற்குக் காரணமான திருத்தூதர் தோமையார், புனித பிரான்சிஸ் சவேரியார் போன்ற மாபெரும் புனிதர்களுக்கு, இந்தியத் திருஅவை நன்றி செலுத்துகின்றது என்று, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் பெங்களூருவில் நிறைவடைந்த இந்திய ஆயர் பேவையின் 33வது பொதுக் கூட்டத்தின் இறுதி அறிக்கையை, பிப்ரவரி 11, இஞ்ஞாயிறன்று வெளியிட்டுப் பேசிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், இந்தியாவில் சமய தேசியவாதம் புறக்கணிக்கப்படுமாறு அழைப்பு விடுத்தார்.

பெண்கள், தலித்துகள், சிறுபான்மை மதத்தவர் போன்றோருக்கு எதிராக, வன்முறையை உற்பத்திசெய்யும் சமய தேசியவாதத்தை, இந்திய நாடு புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் கிளீமிஸ் அவர்கள், உண்மையான அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம், வளமை ஆகியவற்றுக்கு தாய் நாட்டை இட்டுச்செல்லும் ஓர் உறுதியான சமய தேசியவாதம் அவசியம் என்று கூறினார்.

இந்திய அரசியல் அமைப்பால் உறுதி வழங்கப்பட்டுள்ள சட்டங்கள் காக்கப்படுமாறு, நன்மனம் கொண்ட எல்லாருக்கும் அழைப்புவிடுத்துள்ளார், கர்தினால் கிளீமிஸ்.

பன்மைத்தன்மையில் ஒற்றுமையாய் வாழ்வது குறித்த பல பரிந்துரைகளையும் இந்திய ஆயர்கள், இக்கூட்டத்தின் இறுதியில் வெளியிட்டுள்ளனர். 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.