2018-02-13 15:30:00

மெல்கித்திய முதுபெரும் தந்தையுடன் திருத்தந்தை திருப்பலி


பிப்.13,2018. வத்திக்கானில் திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தியோக்கியாவின் கிரேக்க மெல்கித்திய முதுபெரும்தந்தை Youssef Absi அவர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்.

இத்திருப்பலியில் மறையுரை ஆற்றுவதற்குப் பதிலாக, கிரேக்க மெல்கித்திய திருஅவை  பற்றிக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் சகோதரர் முதுபெரும்தந்தை Youssef அவர்களுடன் இணைந்து நிறைவேற்றிய இத்திருப்பலி, உலகளாவியத் திருஅவைக்குள், இலத்தீன் வழிபாட்டுமுறை மற்றும் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு இடையேயுள்ள திருத்தூது ஒன்றிப்பின் அடையாளமாக உள்ளது என்றும், முதுபெரும்தந்தை Youssef அவர்கள், மிகவும் தொன்மையான திருஅவையின் தந்தை என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதுபெரும்தந்தை Youssef அவர்கள், பேதுருவைத் தழுவ வந்துள்ளார், நான் பேதுருவோடு ஒன்றித்திருக்கிறேன் என்று சொல்ல வந்திருக்கின்றார் என்றும், திருநற்கருணைக் கொண்டாட்டத்திற்கு இது பொருள் உள்ளதாக அமைந்துள்ளது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிரேக்க மெல்கித்திய வழிபாட்டுமுறை திருஅவை, கத்தோலிக்க இறையியலுக்குள் தன் சொந்த இறையியல் மற்றும் தனது சிறப்பான திருவழிபாட்டுடன், ஒரு வளமையான திருஅவையாக விளங்குகின்றது என்றரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் மெல்கித்திய மக்களில் பெரும் பகுதியினர், இயேசுவைப் போன்று சிலுவையில் அறையப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

கிரேக்க மெல்கித்திய திருஅவை மக்களுக்காகவும், மத்திய கிழக்கில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காகவும், நம் சகோதரர் முதுபெரும்தந்தை Youssef அவர்களுக்காவும் இத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்திருப்பலியின் இறுதியில், முதுபெரும்தந்தை Youssef அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி கூறினார். திருத்தந்தையின் உடன்பிறந்த அன்பு மற்றும், அவர், கிரேக்க மெல்கித்திய திருஅவை மீது காட்டும் ஒருமைப்பாட்டுணர்வைப் பார்த்து உண்மையிலேயே நான் மனம் நெகிழ்ந்து போனேன் என்றும், திருத்தந்தைக்காகச் செபிப்பதாகவும் உறுதி கூறினார், முதுபெரும்தந்தை Youssef.

இத்திருப்பலியில், மெல்கித்திய கிரேக்க ஆயர் பேரவை உறுப்பினர்களும் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.